மறைக்கப்பட்ட இந்தியா
தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர், திரைப்படம், பத்திரிகை, நாடகம் என, பல தளங்களில் இயங்கி வருபவர் இந்நூலாசிரியர். ‘ஜூனியர் விகடனி’ல் ‘எனது இந்தியா’ எனும் தலைப்பில் தொடராக வெளி வந்து நிரம்ப வரவேற்பைப் பெற்றது இது. வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், விறுவிறுப்பாகவும், சமூக அக்கறையோடும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தமிழில் இத்தகைய நூல் இதுவரை வெளி வந்ததில்லை; ஆதலின் இது ஒரு புதிய முயற்சி.நாட்டு விடுதலைக்காக ரகசிய வானொலி நடத்தியதால், சித்ரவதை செய்யப்பட்ட உஷா மேத்தா, நேதாஜியின் கடைசிப் பயணம், ஆர்மீனியர்களின் அமைதி, வங்கதேசத்தின் முஜிபுர் ரகுமான், ஜோதிராவ்புலே, ஜப்பானின் போராளி நாயர் ஸான், வீரேந்திர சட்டோபாத்யாய போன்ற பலரின் வரலாற்றுத் தகவல்கள் நூலில் நிரம்பியுள்ளன. மனித நாகரிக வளர்ச்சி, பண்பாடு, கலை, இலக்கியம் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன. யவனர்களைப் பற்றி செய்தி இலக்கியச் சான்றுகளுடன் தரப்பட்டுள்ளது.வரலாற்று மாந்தரின் ஒளிப்படங்கள், நிகழ்வுகள் பற்றிய ஒளிப்படங்கள், ஓவியங்கள் ஆங்காங்கே தக்கவாறு இடம் பெற்றுள்ளன. மேற்கோள் நூல்களின் அட்டவணை பல விவரங்களைத் தருகின்றன. நல்ல தாள், சீரான அச்சமைப்பு, எடுத்தால் படிக்கத் துாண்டும் எழுத்து நடை எல்லாவாற்றாலும், ஒரு சிறந்த நூலாக இது விளங்குகிறது. வாசிப்பை நேசிக்கச் செய்யும் நல்ல நூல்.கவிக்கோ ஞானச்செல்வன்