நகரக் கோயில்கள் ஒன்பது
பக்கம்: 256 நகரத்தார் எனும் செட்டியார்கள் போற்றி வணங்கும், ஒன்பது கோவில்கள் பற்றிய நூலிது. கண்ணாதாசன் கவிதையுடன் துவங்குகிறது.கண்ணகியும், மணிமேகலையும், வளையாபதியும் நகரத்தார் பெருமையும், அண்ணாமலை, அழகப்பா பல்கலைக்கழகமும், ஒக்கூர் மாசாத்தியாரும், சீத்தலைச்சாத்தனாரும், செட்டியார் புகழை நாட்டுபவர்களாகக் கண்ணதாசன் பாட்டு எழுதியுள்ளார்.கோட்டை போல் கட்டிய வீடும், குளம், கோவில் அறங்கள், கல்விச் சாலைகள் அமைக்கும் திருப்பணிகளும் பற்றிய விரிவான நகரத்தார் வரலாறு! நாகநாடு முதல், செட்டிநாடு வரை பரந்து விரிகிறது.பாண்டிய மன்னரால், கி.பி., 707 இல் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்த, கீழத்தெருஏழு வழியாருக்கு இளையத்தங்குடி நகரமும், கோவிலும் வழங்கப்பட்டது. விக்ரம, சுந்தர, வீர, குலசேகர பாண்டிய மன்னர்கள் ஆண்ட செழுமையான பகுதிகள் இவை.திருமணங்கள், கோவில்களில் பதிவு செய்யும், "திருமணப்புள்ளி முறை மிகவும் சிறப்பானதாக இருந்தது. இவர் ஈசான சிவாச்சாரியாரை குலகுருவாக ஏற்றுக்கொண்டவர்.திருமகள் அருள்வேட்டல் பாடலில்,"வணிகர் வீடு வந்த இலக்குமியே என்றைக்கும் நீங்காது இரு என்று சொல்வது போல், செல்வச் செழிப்புடனும், தரும சிந்தனையுடனும் நகரத்தார் கட்டிய, ஒன்பது கோவில்களும், அதன் படங்களும், செய்திகளும் படிப்போரைப் பரவசம் அடையச் செய்யும்!