நானும் சினிமாவும்
தமிழ் திரைப்பட தயாரிப்பு துறையில், ஜாம்பவனாக விளங்கிய, ஏவி.எம்.நிறுவனத்தின், ஏவி.எம். சரவணன், தன், 60 ஆண்டு கால திரைத்துறை அனுபவங்களையும், அதுபற்றிய பசுமையான நினைவுகளையும், மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில், எழுதியுள்ள நுால் இது. ‘தினத்தந்தி’ நாளிதழில் தொடராக வெளிவந்து, வாசகர்களின் பாராட்டை பெற்றதால், தற்போது, நுால் வடிவில் வெளியாகியுள்ளது. ஏவி.எம்., நிறுவனம் உருவான வரலாறு, அந்த நிறுவனம் தயாரித்த படங்களைப் பற்றி தகவல்கள், அவற்றில் பணியாற்றிய கலைஞர்களுடனான அனுபவங்கள் என, சுவையான நாவல் போன்ற நடையில் எழுதப்பட்டுள்ளது, இந்த நுால். ‘எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் இடையே எப்போதும் ஒரு போட்டியே நடக்கும். இருவரில், யார், முதலில், மற்றவரை முதலாளி என்று அழைப்பது என்பதே அந்த போட்டி. ‘ஏ.சி.திருலோகசந்தரின் மகள் திருமணத்திற்கு வந்த, எம்.ஜி.ஆரை, ‘வாங்க முதலாளி... நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி’ என்று கூறினேன். உடனே எம்.ஜி.ஆர்... சரியாக வெளிவராத குரலோடு, சைகையில், ‘என்னை முதலாளி என்று கூப்பிடாதீர்கள். என்னால் திருப்பி, முதலாளி என்று கூப்பிட முடியாது’ என்று கூறினார். ‘அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்திருந்தது முதல், பேசுவதில் அவருக்கு சிரமம் இருந்தது. அவர் அப்படி கூறியதை கேட்டதும், என் மனமும், கண்களும் கலங்கி விட்டன...’ என்பது போன்ற நெகிழ்ச்சியான சம்பவங்கள் பல உள்ளன. அது சரவணனின் சிறப்பை பிரதிபலிக்கிறது. இந்த நுாலைப் படிக்கும் ஆர்வத்தை துாண்டுகின்றன. – சி.எஸ்.,