/ பொது / ஓம் சக்தி

₹ 60

(பக்கம்: 402) அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின், தொல்காப்பியத்தின் தொன்மை - புதிய அணுகுமுறை என்ற கட்டுரையுடன் ஆரம்பமாகும், "ஓம் சக்தி மாத இதழின் தீபாவளி மலரில் இலக்கியம், மொழியியல், ஆன்மிகம், அரசியல் சார்ந்த ஏராளமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சாகித்ய அகடமியின் விருது பெற்ற எழுத்தாளர்களான அசோகமித்திரன், மேலாண்மை பொன்னுசாமி, நீல.பத்மநாபன், தோப்பில் முகமது மீரான், பொன்னீலன் ஆகியோரது சிறுகதைகள் உள்ளன. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின், "பாலைவன நதிகள் என்ற கதைக்கு ம.செ., வரைந்துள்ள ஓவியம், "ரியலி சூப்பர்! இத்துடன் அட்டையை அலங்கரிக்கும் வண்ணப் படத்துக்கும், ம.செ.,க்கு, வாசகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் நிச்சயம். "வடக்கு வாசல் இதழாசிரியர், கரண்சிங்கை பேட்டி கண்டு எழுதியுள்ள நேர்காணல், தமிழ் வாசகர் உலகுக்கு நிறைய புதிய தகவல்களை வழங்கும் வகையில் உள்ளது. பிரபல உபன்யாச சிரோன்மணியான சிவானந்த விஜயலட்சுமி, கடோபநிஷத்தின் மையக் கருத்தை பற்றி மிக அழகாக, சுவைபட எழுதியிருக்கிறார். இந்த மலரின், "ஹைலைட் என இதை குறிப்பிடலாம். ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிரேமா நந்தகுமார், "ஸ்ரீ அரவிந்தரும், கிரேக்கப் பண்பாடும் என்றொரு கட்டுரை எழுதி வழங்கியிருக்கிறார். யோகியும், ஞானியுமான ஆன்மிகப் பேரொளி ஸ்ரீ அரவிந்தரின் இலக்கியப் பேராற்றலை, கிரேக்க இலக்கியத்தில் அவருக்கு இருந்த ஞானத்தை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை, ஸ்ரீ அரவிந்தர் சார்ந்த இலக்கிய கிரீடத்திற்கு மேலும் ஒரு மயிலிறகு. ஜெயா வெங்கட்ராமன், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் சமூகப் பணிகள் பற்றி தமிழ் கூறும் நல்லுலகிற்கு நிறைய தகவல்களை ஒரு கட்டுரை மூலம் வழங்கியிருக்கிறார். கலை உலகம் தொடர்பான பிரிவுக்கு, ராணி மைந்தன், வாணி ஜெயராமை பேட்டி எடுத்து எழுதியுள்ள கட்டுரை சிறப்பு சேர்க்கிறது.கவிதை பிரிவிலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற சிற்பி, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் ஆகியோரின் படைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இத்துடன் சிறந்த கவிதைக்காரர்களாக வாசகர்களால் மதித்து பாராட்டப்படும் தாமரை, பழமலய், கலாப்ரியா, புவியரசு, இரா மீனாட்சி ஆகியோரின் கவிதைகளும் மலருக்கு சிறப்பு சேர்க்கின்றன. தெய்வங்கள், ஆன்மிகச் சான்றோர்களின் வண்ணப்படங்கள் மலருக்கு அழகு சேர்க்கின்றன.மிகக்குறைந்த விலையில் மிக மிக அதிகமான உபயோகமான விஷயங்களை உள்ளடக்கிய தீபாவளி மலர் என்ற பெருமையை, "ஓம் சக்தி பெறுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை