பச்சைப்புடவைக்காரி முதல் அதிகாரம்
‘தினமலர்’ நாளிதழ் ஆன்மிக மலரில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வரும் பச்சைப்புடவைக்காரி தொடரின் முன்னோடியாக அமைந்துள்ள நுால். முதன் முதலில் நுாலாசிரியர் பச்சைப்புடவைக்காரியை பார்த்து பேசியது இந்த தொடரில் தான். பச்சைப்புடவைக்காரியின் அன்பு கனத்தை தாளமாட்டாமல் அழுது கொண்டிருந்த நுாலாசிரியரிடம், ‘வா... இருவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதலாம்’ என்று அவள் சொன்னால்... சொன்னபடியே செய்தால்... அதன் விளைவு தான் பச்சைப்புடவைக்காரி முதல் அதிகாரம். வழக்கமாக தாய் தான் பிள்ளைக்கு பெயர் வைப்பாள். இதில், தாய்க்கு பெயர் வைக்கும் பிள்ளையை பார்த்து வியக்கிறோம். அந்த பெயரை ஏற்றுக்கொண்ட பச்சைப் புடவைக்காரியின் தாயன்பில் சிலிர்க்கிறோம். ஆன்மிகம் என்பது வெறும் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் இல்லை. அது இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையில் மலரும் ஆழமான காதல். காதலின் நடுவே தோன்றும் செல்ல சண்டைகளும், அதனால் விளையும் சொல்லாடல்களும் தான் இதன் கருப்பொருள். ‘தாயினும் சாலப்பரிந்து’ என்ற முதல் அத்தியாயத்தில் பச்சைப்புடவைக்காரியிடம் கோபித்துக் கொள்கிறார் ஆசிரியர். அன்பை இன்னும் செம்மையாக எழுத்தில் வடிக்கும் வரத்தை கேட்கிறார்; அவளோ தர மறுக்கிறாள். கோபம், சண்டை எல்லாம் தொடர்கிறது. கடைசியில் பச்சைப்புடவைக்காரி, ‘உன் மனதில் இருக்கும் அன்பைத்தானே நீ எழுத முடியும்...’ என வெடிக்கிறாள். பின் அன்பையே அந்த அன்பரசியிடம் வரமாக கேட்டு, பெற்ற பின் எழுத்தாக்கியது தான் இந்த கதை. ‘பிரச்னையில்லாத வாழ்க்கையும், துன்பமில்லாத மரணமும் தான் வேண்டும்’ என வெறுத்து பேசும் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு, அன்னை காட்டும் வழி மிகச்சிறந்த வாழ்வியல் பாடம். அபிராமி அந்தாதி, பாரதியார் பாடல்கள், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் மிளிரும் தாயின் திருப்பெயர்களை தாராளமாக பயன்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், நடந்ததை சொல்லும்போது தோள் மேல் ஆதரவாக கையை போட்டு அன்பாக பேசுவது போன்ற உணர்வை கொடுக்கிறது. ‘நீ உப்பால் ஆன பொம்மை, கடற்கரையில் நின்று கதையளந்து கொண்டிருக்கிறாய். முன்னேறி சென்று முன்னால் நிற்கும் அன்பு கடலில் விழுந்துவிடு. அது ஒன்று தான், நீயும் நானும் ஒன்றாகும் வழி’ என, அத்வைதத்தின் சாரத்தை எளிமையான வார்த்தைகளில் விளக்கியிருப்பதும் சிறப்பு. ஒரு இடத்தில் உள்ளபடியே பயத்தில் நடுங்க வைத்து விடுகிறது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தங்களை பெண்ணாக எண்ணி இறைவனை காதலனாக பாவித்து உருகி உருகி பாடல்கள் எழுதி இருக்கின்றனர். அதை நாயகி பாவம் என்று போற்றுகிறோம். அதேபோல் பெண் தெய்வமான உங்களிடம் காதல் கொள்வது போன்ற பாவனையில் எழுதுவது சரியா என பச்சைப்புடவைக்காரியிடம் ஆசிரியர் கேட்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அதற்கு மென்மையான வார்த்தைகளில் அழகான பதிலை சொல்லும்போது, மனதில் தோன்றிய அதிர்ச்சி அன்பு பிரவாகமாக மாறி விடுகிறது. ஐந்து அத்தியாயங்கள், ஐந்து வகை தேடல்கள். ஒவ்வொரு தேடலின் முடிவிலும் கிடைக்கும் ஆன்ம தரிசனம். இது தான் இந்த நுாலின் படிவம். இது வெறும் பக்தி நுால் அல்ல; ஒரு மனிதனின் அகப்பயணம். மதுரையின் வீதிகளில் அன்னை மீனாட்சியுடன் கைகோர்த்து உலவ விரும்பும் எவரும் தவறவிடக்கூடாத பொக்கிஷம். – சுமித்ரா தேவி




