பண்டைத் தமிழ்ச் சமூகம்
நியூ செஞ்சுரி புத்தக நிலையம், 41-பி, சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை-58. (பக்கம்: 240 ). தமிழ்ப் பேரறிஞர் கா.சிவத்தம்பி வள்ளவத்தையில் வாழும் ஈழத் தமிழர் ஆவார். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்தகன்று நிறைந்த புலமையும், இலக்கண நுட்பமும், பிறமொழி அறிவும், உலக இலக்கியப் பார்வையும் உடையவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் இவர். முதுநிலை மார்க்சிய ஆய்வாளராகிய சிவத்தம்பி, பண்டைய தமிழகத்தின் சமூக உருவாக்கம், அரசுருவாக்கம், இலக்கியக் கோட்பாடுருவாக்கம் ஆகிய மூன்று பொருள்களை முதன்மையாகக் கொண்டு இந்நூல் ஆய்வு நடத்தியுள்ளார். திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள், பூர்வகாலத் தமிழகத்தில் அரசமைப்பு உருவாக்கம், பண்டைய தமிழகத்தில் உயர்குடி ஆதிக்க மேட்டிமையின் வளர்ச்சி, சங்க இலக்கியமும் தொல்லியலும், முல்லைத் திணைக்கான ஒழுக்கம் என்றும் ஐந்தும் நூலின் உள்ளடக்கமாக இருக்கின்றன. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், மு.இராகவையங்கார், எ.எல்.பாஷ்யம், எஸ்.வையாபுரி பிள்ளை, தனிநாயக அடிகள், தொல்காப்பிய உரையாசிரியர்கள், கபில் சிவலபிள்ளை, கே.கைலாசபதி போன்ற அறிஞர்களின் கருத்துக்கள் மேற்கோளாகப் பயன்பட்டுள்ளன. பொருளாதாரம், மகளிர் நிலை, உயர்குடித்தன்மை ஆகியன மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டுள்ள மிகச் சிறந்த ஆய்வு நூல் இது. முதுநிலை ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டக்கூடிய நல்ல நூல்.