பேராசிரியர் ந.நடராசனார்
தமிழ் மொழியின் ஆழம், புலமை ஆகியவற்றால், தமிழுக்கு பெருமை சேர்த்த பெருந்தகையாளர்களில் நடராசனார் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட படைப்பு. நடராசனார் நாஞ்சில் நாட்டினர்; மொழியியல் அறிஞர். தமிழ்மொழி கற்றல் கற்பித்தல், அதற்கான தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வல்லவர். தென்னிந்திய மொழிகள் பயிற்று மையத்தில் பணியாற்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், தமிழ் வளர அயராது உழைத்தவர்.இதற்காக பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்த ‘ஆதிப்பூர்’ சென்று, சிந்தி மொழி கற்றவர்கள் நடுவே ஆற்றிய பணி, இந்தியாவின் கிழக்கே மணிப்பூர் சென்றது ஆகியவை சிறப்பானது. ‘இந்தியாவின் பன்முக நோக்கை’ அறிந்து, செம்மொழித் தமிழுக்கு ஆற்றிய பங்கு (பக்கம் 32) இந்த நுாலில் இடம் பெற்றிருக்கிறது. இன்றைய மொழியியலை தொல்காப்பியம், நன்னுால் சுட்டிக்காட்டியதை தன் ஆய்வுகளில் உலகத்திற்கு எடுத்துரைத்த இவர், புதுக்கவிதை நெறிகளையும் ஆய்ந்தவர். அவர் தன் கடவுளாக ஆடலரசனை மதிப்பதும், இன்றைய ஆய்வேடுகள் பற்றிய அவரது கவலையும் சிந்தித்தக்கத் தக்கவை.தமிழ் பேசி, அதிகமாக, பணம் ஈட்டி புகழ் பெற்ற பலரும், இச்சிறிய நுாலில் உள்ள உயரிய கருத்துக்களை உணர்ந்தால், தமிழ் ஆய்வுக்கு புதிய சிந்தனைகள் பிறக்க வழிகாட்டும்.