சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம்
அருள் பதிப்பகம், 107/8, கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 256) விருதுநகர் மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சதுரகிரி எனும் திருத்தலத்தை, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து துவங்கி, 28 கி.மீ., தூரம் வாகனத்தில் பயணித்திட, தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து நெடுங்குத்தான மலையில் 10 கி.மீ.,தூரம் ஊன்றுகோல் உதவியுடனும், உறுதியான நெஞ்சுறுதியுடன் மட்டுமே ஏற இயலும். ஆயினும், இந்நூலாசிரியை, ஆன்மிக அன்பர்களை இன்முகத்துடன் வழி நடத்திக் காண்பிப்பதுடன், ஒவ்வொரு திருமூர்த்தம் அமைந்துள்ள அதன் பெருமைகளையும், தல வரலாறுகளையும் கோர்வையாக அலுப்பு சலிப்பு தட்டாத வண்ணம் எடுத்துரைத்துள்ள பாங்கு நேர்த்தியாக உள்ளது. பதினென் சித்தர்களது தலைமை பீடமாக இத்திருத்தலம் விளங்குகிறது. அவர்கள் அனைவரது செயற்கரிய செயல்கள் மற்றும் நூலாசிரியை, "பிரானிக் ஹீலியம் எனப்படும் உயிர் சக்தி மருத்துவமுறை பயிற்சியாளர் என்ற முறையில் அதுபற்றிய விளக்க உரைகள் இந்நூலுக்கு போனஸ்.