செய்தி உலகம் (A Guide for Information & Journalism)
ஊடகத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி ஏற்பட்ட காலத்தில், அரசின் செய்தி மக்கள் தொடர்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இந்த நூலில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். செய்தித்துறை விழிப்புடனிருந்து பணியாற்றும் போது அதன் முக்கியத்துவம் அபாரமானது என்பதை இந்த நூல் படம் பிடிக்கிறது.தமிழ்நாடு அரசின் செய்தித்துறை தோற்றம், வளர்ச்சி, பொருட்காட்சி, அரசு விழாக்கள், தமிழ்நாடு திரைப்பட பிரிவு என்று பல்வேறு தலைப்புகளில் இவை தரப்பட்டிருப்பது சிறப்பு.அரசின் நிறையைச் சொல்லும் போதே, குறைகளையும் தைரியமாக எடுத்துரைத்து, சமுதாயத்தின் ஜனநாயகத்தின் துாணாகப் பத்திரிகைகளும், செய்தியாளர்களும் விளங்குகின்றனர் என்பது மிகையன்று (பக்கம்.41). அரசு செய்தித்துறையில் கண்ணும் கருத்துமாக பணிபுரிபவர்களே இத்துறையை அழகு செய்ய இயலும் (பக்.49) போன்ற கருத்துக்கள், ஆசிரியரின் அழுத்தமான பத்திரிகை உணர்வைக் காட்டுவதாகும். அதே போல, மக்கள் தொடர்பு அதிகாரிகள் எப்படிச் செயல்பட வேண்டும், அரசு பொருட்காட்சிகள் பொழுதுபோக்கு பிரிவு என்பது மட்டும் அல்ல, பலருக்கு வேலை தரும் களன் என்று கூறியிருப்பது அவரது பொதுப்பார்வையை விசாலமாக்கி உள்ளது.பெண்களை இழிவுபடுத்தும் திரைப்படம், சிறார்களை கொடுமைப்படுத்துவது ஆகியவை அங்கீகரிக்கப்படாதவை என்பதும் இந்த நூலில் காணப்படும் தகவல்கள். ஒரு பொறுப்பான பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவர் பல்வேறு விஷயங்களை தெளிவாக தொகுத்து அளித்திருப்பதால், செய்தித்துறைகளில் பணியாற்ற விரும்புவோர், பணியாற்றுபவர்கள் இந்த நூலைப் படித்து அதிகம் பயன் பெறலாம்.