சோழவந்தான் அரசஞ்சண்முகனார்
பெரும்புலவரும், பேராசிரியரும், படைப்பாளரும், ஆய்வாளரும், உரையாசிரியருமாகிய, சோழவந்தான் அரசஞ்சண்முகனாரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், அவர்தம் ஆற்றலும், திறமும் காட்டும் நிகழ்வுகள், சண்முகனாரின் பண்பு நலன்கள் அனைத்தும், இந்த நூலில் தெளிவுற எழுதப்பட்டுள்ளன. தமிழுலகம் மறந்துவிட்ட ஒரு பேரறிஞரின் வாழ்க்கையையும், அவர்தம் பணிகளையும் சுட்டிக்காட்டும் இந்நூல் வரவேற்கத்தக்க ஒன்று.கல்விப்பணியில் புகழ்மிக்கவரும், சிந்தனையாளருமான அறிவுடை நம்பியின் எழுத்துகள், தமிழுலகம் நன்கறிந்ததே. திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் போல், சண்முகனாரும் பக்திப் பனுவல்கள் பல படைத்தவர். பிள்ளையவர்கள் ஈடுபடாத ஆராய்ச்சி வகைமையிலும், சண்முகனார் தம்திறம் காட்டியவர். தொல்காப்பிய பாயிர விருத்தியுரை இவரை உரையாசிரியராக மட்டுமன்றி, சிறந்த ஆய்வாளராகவும் காட்டுகிறது.இவர் வாழ்வில், வியத்தகு நிகழ்ச்சிகள் பல நடந்துள்ளன. காளியே வெகுண்டபோதும் மன உறுதி கொண்டவராக மறுத்த நிகழ்ச்சி வியக்கச் செய்கிறது. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் இவர்தம் உற்ற நண்பராக விளங்கியுள்ளார். அத்துடன், பண்டிதமணிக்கு ஆசானாகவும் அரசஞ்சண்முகனார் அமைந்தமை சுட்டிச் சொல்லப்படுகிறது. தமிழர் எவரும் படித்தறிய வேண்டிய நல்ல நூல்.கவிக்கோ ஞானச்செல்வன்