உத்தமர் ஓமந்தூரார் வாழ்க்கை வரலாறு
சென்னை ராஜதானி முதல்வராக இருந்த ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கையை சித்தரிக்கும் நுால். உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் சிறைவாசம் பெற்ற விபரங்கள் உள்ளன. முதல்வராக இருந்தபோது, பாரதியார் பாடல்களை நாட்டுடைமை ஆக்கியது; கீழைச் சுவடி நுாலகம், தஞ்சை சரஸ்வதி மகால்களில் இருந்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது; தமிழ் வளர்ச்சி கழகம் ஏற்படுத்தியது; அதன் மூலம் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாக்க எடுத்த நடவடிக்கை செயல் வடிவம் பெற்று, 10 தொகுதிகள் வெளி வந்தது பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில்களில் இறைவன், இறைவியர் பெயர் தமிழில் வழங்க ஆணையிட்டது, தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னம், மதம் சார்ந்தது என்று முறையீடு எழுந்தபோது, அது திராவிட கட்டடக் கலையம்சம் எனக் கூறி ஏற்கச் செய்தது போன்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆலய பிரவேசச் சட்டம், தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி போன்ற திட்டங்களால் நிலைத்த புகழ் பெற்றது பற்றி கூறப்பட்டுள்ளது. நாட்டுக்கு உழைத்த நல்லவரை அறிய பயன்படும் நுால்.– புலவர் சு.மதியழகன்