/ வரலாறு / வள்ளியாறும் பெரியகுளம் ஏலாவும்

₹ 225

பல்லுயிரின வாழ்வாதாரமான நீராதாரம் பற்றி, விரிவான தேடலுடன் வரலாற்று பூர்வமான தகவல்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். தமிழகத்தின் ஒரு பகுதியில் பயன்படுத்திய தொழில் நுட்பம், நீர் மேலாண்மை சிறப்பியல்கள் பற்றி ஆதாரப்பூர்வமாக பேசுகிறது. வேளாண் உற்பத்தி, மக்கள் வாழ்க்கை, சார்பு தொழில்கள் மேன்மையை வரலாற்று பின்புலத்துடன் அலசியுள்ளது. கன்னியாகுமரியின் நீர் வளம் முதல் அத்தியாயமாக தரப்பட்டுள்ளது. மழை வளம், பாயும் ஆறுகள், நீர்த்தேக்கங்கள், வளப்படுத்தும் பரப்பு பற்றிய குறிப்புகளுடன் போதுமான படங்களும் உள்ளன. அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலையில் பாயும் வள்ளி ஆறு பற்றிய செய்திகள் உள்ளன. அதன் துவக்கம், பாய்ந்து வளப்படுத்தும் பரப்பு, அதற்குள் வரலாற்று சுவடுகளாக அமைந்துள்ள கோவில்கள், அவற்றின் பழமை, கல்வெட்டு ஆதாரங்கள், நீர் பயன்பாடு மற்றும் மேலாண்மையில் உள்ளூர் நிர்வாகத்தின் மேன்மை என விரிந்துள்ளது.தடுப்பணைகள், இயற்கை போக்கில் ஆற்றில் மாற்றங்கள், தொழிற்சாலைகளால் மாசு என விபரங்களையும் தருகிறது. அரபிக்கடலில் வள்ளி ஆறு சங்கமிப்பது வரை தடயங்கள் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆற்றையும், அது சார்ந்த நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தீவிரமாக வலியுறுத்துகிறது.அடுத்து பெரியகுளம் ஏரி தொடர்பான வரலாற்று தடயங்கள், தற்போதுள்ள நிலை, வள்ளியாறு நீரேற்றம், பாசன பரப்பு, மதகு, மடை என நீர் மேலாண்மையில் தொழில் நுட்பங்களை விளக்குகிறது. நீராதாரத்தை பாதுகாக்கும் உள்ளூர் அமைப்பு முறை மற்றும் நீர் மேலாண்மையில் வியப்பூட்டும் செய்திகளை பொதிந்துள்ளது.ஏரி சார்ந்திருந்த உள்ளூர் தொழில்களான வாத்து வளர்ப்பு, மண்பாண்டம் வனைதல் போன்றவை குறித்து விரிவாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏரி மற்றும் அதன் நீர் பாயும் பரப்பின் சூழலியல் மேன்மை, சார்ந்து வாழும் உயிரினங்கள், அவற்றால் மனித குலம் பெறும் நன்மை பற்றிய தகவல்கள் அரிதின் முயன்று தொகுக்கப்பட்டு உள்ளது.பல்லுயிரினங்களை பாதுகாத்து, பொருளாதாரத்தை உயர்த்தும் நீராதாரத்தின் தற்போதைய நிலை பற்றிய விரிவான தகவல்கள், சூழல் பாதுகாப்பில் பெருமளவு உதவும். உள்ளூர் வளம் காக்க வரலாற்று பூர்வமான தகவல்களை திரட்டி தரும் முன்னோடி நுால்.– அமுதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை