1,800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம். இதன் வரலாற்றை ஆய்ந்து, ‘1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலாக வி.கனகசபை ஆங்கிலத்தில் எழுதினார். இதைப் பழகு தமிழில் பன்மொழிப் பாவலர் பேரறிஞர் க.அப்பாதுரையார் இந்த நூலில் தந்துள்ளார்.பழமைக்குச் சான்றளிக்கும் சங்கப் புலவர்களின் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறும் மகத நாட்டுச் சதகர்ணியும், இலங்கைக் கயவாகு நூற்றுவர்கன்னர் என்பவரே சதகர்ணியர். முதல் சதகர்ணியை சிலம்பு குறிப்பதாகக் கூறுகிறார்.பதிமூன்று மண்டலங்களாக எல்லை வகுத்து நின்ற தமிழகத்தின் நிலப்பிரிவுகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. மதுரை மாநகர் மட்டுமே அன்று முதல், இன்று வரை பழமைக்கும், பெருமைக்கும் சான்றாகத் திகழ்கிறது. குமரி முனைக்கு அப்பால் குமரி மலை, பLறுளி ஆறு இருந்தது. பயண ஆய்வாளர் டாலமி குறிப்பிடும், ‘தங்கலா’ திருத்தங்கல் என்றும், ‘மோதுரா’ மதுரை என்றும் தீர்மானிக்கிறார்.நாகர்கள் என்னும் பழங்குடியினர் எயினர், ஒளியர், அருவாயிர், பரதவர் என்ற கிளை இனத்தவராக வாழ்ந்திருந்தனர் (பக்.66). ‘கரிகால் சோழன் மகள் நற்சோணை, சேர அரசன் இரண்டாம் ஆதனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள். இவளே சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள் தாய்’ (பக்.107) என்று சிலம்பை ஆதாரமாக்கிக் காட்டுகிறார். சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலையை ஆதாரமாகக் கொண்டு சேர, சோழ, பாண்டியர் வரலாறுகளை நிறுவுகிறார்.வேளிர் மன்னர் பற்றிய ஆய்வுக்கு மதுரைக்காஞ்சி, அகநானூறு நூல்களை எடுத்தாள்கிறார். நெடுநல்வாடையின்படி அரண்மனை அந்தப்புரத்தில் அரசியர் உரிமைகளையும், சிலப்பதிகார ஆய்வின்படி, அரசியின் அந்தப்புரத் தோழியாக, பெருங்குடிப் பெண்களும், கூன்படைத்தோரும், உடல் ஊனமுற்ற மகளிரும், அலிகளும் (திருநங்கையர்) இருந்ததைக் கண்டறிந்துள்ளார் (பக்.155) ஐம்பாற் கூந்தல் அன்று அழகாக வைத்திருந்ததை பொருநர் ஆற்றுப்படையின் ஆய்வில் கூறுகிறார். பொம்மை விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும் சிறுமியர் திருமணம் செய்து வைக்கப்பட்டதை, மெகஸ்தனிஸ் குறிப்பால் விளக்குகிறார் (பக். 173).பதினோரு வகையான ஆரியக் கூத்தை அகநானூறு வழியில் விரிவாக எழுதியுள்ளார். ஜெர்மன் அறிஞர் ஆல்பிரட் சுவைட்சர், திருக்குறளை இந்தியாவின் மூல முதலான சிந்தனைக் கருவூலம் என்று கூறியதைக் காட்டி அந்நூலின் சிறப்புகளை விவரிக்கிறார். சங்க நூல்களின், 25,118 அடிகள் கொண்ட பாடல்களே, பண்டைத் தமிழர் வரலாறு நாகரிகங்களுக்கு ஆதாரமாக நிற்கின்றன என்பதை இந்நூல் தெளிவாக்குகிறது.முனைவர் மா.கி.ரமணன்