ஆன்மாவும் ஆன்மிகமும்
பக்கம்: 136 நூலின் தலைப்பு, எளிதான விஷயத்தைப் பற்றியது அல்ல என்பதை எடுத்த எடுப்பில் கூறுகிறது. இன்றைய பரபரப்பு உலகில்,உயிர் என்பது என்ன என்ற தெளிவும், உடம்போடுஉயிரின் நட்பு என்ன என்பதையும் சிந்திக்காமல், காலம் கழிக்கிறோம்.ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலா ஆனந்தம் பெறுவதற்கான வழி ஆன்மிகம். அது, இந்த நாடு உலகிற்கு உணர்த்திய பெரும் அருள் நெறி.ஆன்மா என்றால் எது, அதை உணர்வது எப்படி என்பதை சிறப்பாக எளிய முறையில், ஆசிரியர் விளக்கியிருக்கிறார். ஏற்கனவே, மகான் அரவிந்தரின், தத்துவத்தில் மூழ்கி முத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், அஞ்ஞான இருள் அகற்ற, ஞான ஒளி தான் தீர்வு என்று கூறும் ஆசிரியர், "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம் என்ற வள்ளுவத்தில் இருந்து படிப்படியாக விளக்குகிறார்.இறைவனிடம் இருந்து தோன்றிய உலகம் இறையம்சம் உடையது என்று விளக்கி, இதுவல்ல, இதுவல்ல என்று ஒவ்வொன்றாக விலக்கி, முடிவில் ஆன்ம அனுபவம் பெறுவதை கூறியுள்ளார்.கதைகள், உபநிஷதக் கருத்துக்கள், ரமணர், அரவிந்தர், விவேகானந்தர் போன்ற நெறியாளர்கள் கருத்துக்களைக் கூறி, மனம் எனும் தோணியை வைத்துக் கொண்டு எப்படி ஆன்மிக அறிவும், தேடலில் வெற்றியும் காணலாம் என்பதை விளக்குகிறார். தர்ம நெறி பிறழாது வாழ விரும்பும், அனைவரும் ஆசிரியர் காட்டும் ஆன்மிக தேடலை உணர்ந்து அனுபவிக்கலாம்.