எனது இளமைக் காலம் பிடல் காஸ்ட்ரோ
பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.75. கியூபா நாட்டின் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ. இந்தியத் தலைநகரமாம் டெல்லிக்குச் செல்பவர்கள் தாஜ்மகால் என்ற உலக அதிசயத்தைக் காணாமல் செல்வதில்லை. அதேபோல் தென் அமெரிக்க நாட்டிற்குப் பயணம் செய்யும் எவரும் மாவீரன் பிடல் காஸ்ட்ரோ என்ற அதிசயத்தைச் சந்திக்காமல் திரும்புவ தில்லை. ஒரு காலத்தில் பகத்சிங் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டாலே இளைஞர்கள் உடலில் புது ரத்தம் பாயும்.அதே போல் கியூபா என்ற வார்த்தையும் பிடல் என்ற வார்த்தையும் கோடானுகோடி முற்போக்குச் சிந்தனையாளர்களின் மனதைக் கவ்விப் பிடிக்கிறது. இந்த வரலாற்று நாயகனின் இளமைக்காலம் மிகச்சிறப்பாக இப்புத்தகத்தில் சுவைபட, எளிமையாக சலிப்பின்றிப் படிக்கும் வகையில் புரட்சிகர உணர்வை இக்காலத்து இளைஞர்களுக்கு ஊட்டும் வகையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 1926 ஆகஸ்டு 13 ல் காஸ்ட்ரோ பிறந்தது முதல், செல்வச் செழிப்பாக வாழ்ந்தது, கிறிஸ்தவப் பள்ளியில் படித்தது, ஹவானா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள், அவர் முதன்முதலில் ஆயுதமேந்தி நடத்திய மென்கெதாடா தாக்குதல், அன்றைக்கிருந்த கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாடு என்று பல்வேறு பரிமாணங்கள் இந்தப் புத்தகத்தில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.பிடல்-காஸ்ட்ரோவுக்கும் மேகுவேராவுக்கும் இருந்த புரட்சிகரத் தோழமை உணர்வுகளும் நட்பும் சித்தரிக்கப்பட்டுள்ளன.