நரி விருத்தம்
ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80.)`உலகில் இரு; ஆனால் அதனுள் சிறைப்படாதே' என்ற உன்னதமான உண்மையை ஜைன சமயம் கூறுகிறது. இதைச் சீவகசிந்தாமணி என்னும் பெருங்காப்பியம் பேசும். இதை எழுதிய திருத்தக்கதேவரே இந்த நரி விருத்தம் என்னும் 51 செய்யுளையும் எழுதியுள்ளார். பலரும் ஏற்கும் வகையின் தெளிவுரையும் பாடலின் கீழே தரப்பட்டுள்ளது சிறப்பாக உள்ளது.`பேரின்பம் தரும் இறைவனைப் பாடும் துறவிகளாலும், சிற்றின்பம் தரும் நூலை எழுத முடியும்' என்பதற்காகவே இதை எழுதியுள்ளார் புலவர்.நரிகளின் பேராசையை ஆதாரமாக வைத்தும், 18 கதைகளைக் கூறியும், உலகியல் உண்மைகளை இதில் கவிஞர் கூறியுள்ளார். ஆசையில் உழல்பவன் ஆத்ம சுகத்தை இழக்கிறான். புலனை அடக்கி, தர்மம் செய்பவன் நற்பலனை அடைகிறான் என்பதையே இந்நூல் உணர்த்துகிறது.`இளமையும் வனப்பும் நில்லா, இன்பமும் நின்ற அல்ல, வளமையும் வலிது நில்லா, வாழ்வு நாள் நின்ற அல்ல' என்ற பாடலின் முடிவில் நில்லாதவை நடுவே அறமே என்றும் நிற்கும் என்று நீதி கூறுகிறது நரி விருத்தம்.படிக்க வேண்டிய பழந்தமிழ், இலக்கியம் இது.