DR.MANMOHAN SINGH A DECADE OF DECAY
Pages: 500 இன்று நாட்டில் பரவலாக பேசப்படும் பொருளாதார சீர்கேடுகள் எப்படி உருவானது, அது உருவானதற்கான தவறான அணுகுமுறைகள் என்ன என்பது பற்றி பொருளாதார வல்லுனரும், சுதேசி அமைப்பில் ஈடுபட்டுள்ளவருமான ஆசிரியர் விளக்குகிறார்.பொருளாதார சீர்கேடுகளை களைய விரும்பி ஆசிரியர் கூறும் வழிமுறைகள் குறித்து பொருளாதார அறிஞரும், அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துபவருமான டாக்டர் சுவாமி தன் முன்னுரையில் விளக்கி, இப்புத்தகத்தை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருப்பது சிறப்பாகும் .நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கடந்த பின்னும், பொருளாதார அணுகுமுறையில் நாம் பாதை மாறிவிட்டோம் என்ற கருத்தை ஆசிரியர் இந்த நூலில் பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்கிறார். அந்த கோபம் தானோ என்னவோ, புத்தக தலைப்பை பரபரப்புடன் அமைத்திருக்கிறார் போலும்."2ஜி ஊழல் முதல் அடுத்தடுத்த தொடர் ஊழல்கள், கறுப்பு பணம் அதிகரிப்பு, அது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த அதிருப்தி கருத்துக்கள் ஆகியவற்றை வாதத்திறமையுடன் கூடிய ஆங்கிலநடையில் எழுதியிருப்பது பலரைக் கவரும். மத்தியஅரசின் 2013ம் ஆண்டு பட்ஜெட் குறித்த கட்டுரையில், இப்பட்ஜெட்டை ஹாலிவுட் படக்காட்சிக்கு ஒப்பிட்டுள்ளார். பாலிவுட் படங்களில் மகிழ்வைக் காட்ட சித்தார், வீணை இசையுடன் பின்னணி இசை இருக்கும், ஆனால், சோகத்தை பிரதிபலிக்க வயலின் தான் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டு, இந்த பட்ஜெட் அரசின் சோகத்தை பிரதிபலிப்பது என்றும் குறிப்பிடுகிறார்.இப்புத்தகத்தை பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைமை கமிஷனர் என் .விட்டல், "ஒவ்வொரு கட்டுரையும் ஏராளமான தகவல்களைக் கொண்டிருக்கிறது: ஆங்கில வாசகங்களில் பரபரப்பு ஏற்படுத்தும் வார்த்தைகளை செதுக்கி உருவாக்கியிருக்கிறார் என்று கூறியிருப்பதை, இந்த நூலை வாசிக்கும் வாய்ப்பு பெற்ற அனைவரும் ஒப்புக்கொள்வர்.தமிழகத்தில் ஒரு இளைய பொருளாதார ஆய்வாளர் இருப்பதுடன், மத்திய அரசின் பொருளாதாரத்தை கடுமையாக சாடும் துணிவும் கொண்டவர் என்பதை இவரது எழுத்துக்கள் படம் பிடிக்கின்றன. ஒருக்கால், மோடி பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால், தற்போது நடக்கும் பொருளாதார குழப்பங்களை எப்படி அவர் கையாண்டு சமாளிக்க போகிறார் என்பது இந்திய அரசியலில் அடுத்த கட்ட கேள்வி என்பதையும் சுட்டிக்காட்டியிருப்பது அவரது நடுநிலைமையை காட்டுகிறது.