எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மறைந்து ஒரு தலைமுறைக் காலம் ஆகிவிட்டாலும், அவர் இன்னும் மக்கள் மனங்களில் புகழுடம்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவரோடு நெருங்கிப் பழகியவர்கள், அவரால் பயனடைந்தவர்கள், இணைந்து பணியாற்றியவர்கள் என,ஒவ்வொருவரும் தங்கள் நினைவுகளை எப்போது கூறினாலும், அதை ஆர்வமுடன் செவிமடுப்பதுமக்களுக்கு மகிழ்வளிப்பதாக இருக்கிறது. அவ்வகையில் மேஜர்தாசன், "மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்., ரசிகன் என்னும் இதழுக்குப் பொறுப்பேற்று, அதில் கவிஞர் வாலி, வைரமுத்து, நடிகர் திலகம் சிவாஜி, பழம்பெரும் பத்திரிகையாளர் நவீனன், லேனா. தமிழ்வாணன் மற்றும் 30க்கும் மேற்பட்ட பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஓவியர் மணியம் செல்வன் வரைந்த எம்.ஜி.ஆர்., வண்ணப்படம் அட்டையை அலங்கரிக்க, உள்ளேயும் கட்டுரையாளர்களுடன் எம்.ஜி.ஆர்., உள்ள நிழற்படங்களும், திரைப்படக் காட்சிப் படங்களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் பல சுவாரஸ்யமான செய்திகளை எடுத்துரைக்கின்றது.