GEORGE BERNARD SHAW AND Dr.MU.VA. A COMPARATIVE STUDY (ஆங்கில நூல்)
பக்கம்: 176, தமிழத் தென்றல் திரு.வி.க., மு.வ.,பற்றிப் பேசுகையில், மு.வ., பெர்னாட்ஷாவை மிக ஆழமாக வாசித்து வாசித்த அவரே தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா ஆகிவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மிகையல்ல,உண்மையே. மு.வ.,வுக்கு ஷா மீது அவ்வளவு ஈர்ப்பு. இந்த இரு இலக்கிய ஜாம்பவான்களுக்கும், உலகைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதைச் சீர்திருத்தவும் வேண்டும் என்ற கருத்தில் பெருத்த உடன்பாடு உண்டு. அதற்கு ஷா தேர்ந்தெடுத்த வழி நாடகங்கள். மு.வ. தேர்ந்தெடுத்தது நாவல்கள்.ஷாவின் கிண்டலும், கேலியும் உலகப் புகழ் வாய்ந்தவை. மு.வ.,வை அந்த அளவிற்கு சொல்ல முடியாது. ஏனென்றால், மு.வ., அடிப்படையில் மிக மென்மையான மனிதர். தனது நகைச்சுவையால், பிறர் மனம் புண்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமுள்ளவர். ஷாவுக்கு, மிக முதிர்ந்த வயதில் தான் இயேசு கிறிஸ்துவும், பைபிளும் மனிதனுக்கு மிக அவசியம் என்று புலப்பட்டது. ஆனால், மு.வ.,வுக்கோ மிக இளம் வயதிலேயே வாழ்க்கைக்கு மதம் மிகத் தேவையானது. வாழ்வாதாரத்துக்கு, கடவுள் அவசியம் தேவை என்ற ஞானம் வந்துவிட்டது. அந்த வகையில், ஷாவை மிஞ்சி விட்டார் மு.வ., என்றே சொல்லலாம்.மு.வ., மீது ஷாவின் தாக்கம் குறித்து, முதல் அத்தியாயத்தில் விவரிக்கும் ஆசிரியர் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இருவரது பாத்திரப் படைப்புகள், பெண் பாத்திரங்கள், காதல், வறுமை, எதிர்காலத்தைப் பற்றிய கனவு முதலியவற்றை திறம்பட ஆய்வு செய்கிறார். இருவரைப் பற்றிய பல சுவையான தகவல்கள் நூலில் உண்டு. இலக்கிய அன்பர்கள் அவசியம் படித்து ரசிக்க வேண்டிய நூல்.