/ வாழ்க்கை வரலாறு / இந்தியாவின் இராபின்ஹூட் செம்புலிங்கம்

₹ 340

பொதுவாக வாழ்க்கை வரலாறு எழுதுவது தொங்கும் கயிற்றில் நடப்பது போன்ற ஒரு வித்தை. கொஞ்சம் தவறினாலும் பிரச்னை ஏற்பட்டுவிடும். அதை மிக சரியாக கையாண்டுள்ளார் நுாலாசிரியர். மனைவி, குழந்தைகள், குடும்பம் என வாழும் ஒரு சாதாரண மனிதன் ஜமீன்தாராலும், வெள்ளைக்கார போலீசாலும் எப்படி குற்றவாளியாக்கப்படுகிறான். அதன் பின் வெகுண்டு எழுந்து அவன் எப்படி வீரனாகிறான் என்பதை விறு விறுப்பாக படைத்துள்ளார். பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த வடலிவிளையில் பிறந்தவர் செம்புலிங்கம். வசதியான குடும்பம். மனைவி, குழந்தை என நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். செம்புலிங்கத்தின் மனைவியின் தோழி மீது கண்வைத்த ஜமீன்தார் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அந்த பெண்ணை கடத்தி செல்கிறார். ஜமீன் தாரிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டு நிச்சயித்தபடி திருமணமும் நடத்தி வைக்கிறார் செம்புலிங்கம். இதனால் ஜமீன்தாருக்கும் இவருக்கும் மோதல் ஏற்படுகிறது. தன்னிடம் இருந்து 10 பவுன் நகையை திருடிச்சென்றுவிட்டதாக செம்புலிங்கம் மீது ஜமீன்தார் புகார் அளிக்கிறார். ஆங்கிலேயே அரசின் உத்தரவின்படி செம்புலிங்கத்தை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. நிரபராதியான தன்னை கொள்ளையனாக்கிதால் வெகுண்டெழுகிறார் செம்புலிங்கம். சிறை கம்பிகளை வளைத்து அங்கிருந்து தப்பி களக்காடு காட்டில் தஞ்சமடைகிறார். அங்கிருந்தபடி ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருக்கும் செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு வாரி வழங்கி இந்தியாவின் இராபின்ஹூட் போன்று செயல்படுகிறார். இறுதியில் தன் நண்பனை காப்பாற்றுவதற்காக போலீஸ் முன் ஆஜராகி அவர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு உயிரை தருகிறார். ஒரு மாவீரனின் கதையை திரைப்படம் பார்ப்பது போன்ற சுவாரஸ்யத்தில் எழுதியிருக்கிறார் நுாலாசிரியர். இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். – நிலா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை