இனிய காசி என்றும் நேசி
முற்றிலும் மாறுபட்ட சாதனையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள பயண நுால். தமிழகத்தைச் சேர்ந்த சிலர், 3,000 கி.மீ., பாதயாத்திரை செய்தபோது கிடைத்த அனுபவம் தொகுத்து எழுதப்பட்டு உள்ளது. இந்த யாத்திரை உலக நன்மை, தேசிய ஒருமைப்பாடு போன்ற நோக்கங்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் துவங்கி, உத்தர பிரதேச மாநிலம் காசி சென்று, கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தது பரவசமாக உள்ளது. அங்கிருந்து கங்கை நீருடன் வந்து, ராமேஸ்வரம், ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை பூர்த்தி செய்துள்ளனர். ஆறு மாநிலங்கள் வழியாக சென்று, 40 நதிகளில் நீராடி, பல மொழி பேசும் மக்களுடன் உறவாடி பயணம் செய்துள்ளனர். வழியில் பல மதத்தவர், பாத யாத்திரைக்கு உதவியுள்ளனர். நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவோருக்கும், இந்தியா முழுதும் பயணம் செய்ய விரும்புவோருக்கும் பயன் தரும்.– பேராசிரியர் இரா.நாராயணன்