/ அரசியல் / இன்சைட் தி வார் ரூம் (ஆங்கிலம்)

₹ 500

தேர்தலை போர்க்களம் போல் அரசியல் கட்சிகள் நோக்கும் இன்றைய சூழலில், வியூகங்களை வகுத்து செயலாற்றும், ‘வார்ரூம்’ பற்றிய விரிவான நுால். பிரமிப்பு தரும் உள்கட்டமைப்பு, அதிகார மைய பரபரப்பு, கமுக்கமான நடைமுறைகளை விறுவிறுப்பாக விவரிக்கிறது. இடைவிடாமல் சிந்தித்தபடி இயங்கும் ரகசியத்தை பாமரரும் புரியும் வகையில் எளிய ஆங்கில மொழி நடையில் விரித்துரைக்கிறது. தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு செய்தியோ, முறையாக அலசப் படாத வதந்தியோ அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை எடுத்துக் காட்டுகிறது. வார்ரூமில் கதையாக்கப்பட்ட செய்தி, எதிர்தரப்பினருக்கு பதிலடி தரும் கூர்ந்த எதிர்வினை எந்த அளவு பொதுமக்களை சேர்கிறது என்பதை விளக்குகிறது. கொந்தளிப்பான தேர்தல் காலத்தில் கட்சி தலைமையின் திட்டங்களை பகிர்வதில் முன்னிலை வகிப்பதை மல்யுத்தம் செய்வது போல விளக்கி யிருக்கிறது. அமைதியான அறைகளில் எடுக்கப்படும் முடிவுகள், அடுத்த நாள் அரசியலில் ஏற்படுத்தும் அதிர்வுகளை படம் பிடித்து காட்டுகிறது. பயிற்சி பெற்ற பணியாளர் செயல்திறன் பற்றியும் அறிய தருகிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் இயங்கும் ‘வார்ரூம்’ அரசியல் வெளியில் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்காக வினையாற்றுவதை அருமையாக விவரிக்கிறது. எதிரெதிராக செய்திகளை வீசி நடத்தப்படும் ஊடகப் போர் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அரசியல் நகர்வுகளை ஆழ்ந்து நோக்கி, அறிவார்ந்த பகுப்பாய்வு செய்து வடிவமைக்கும் கலையாக வார்ரூம் செயல்பாட்டை அறிய தருகிறது. சிக்கல் நிறைந்த களச் சூழலில் முடிவெடுக்கும் கலையை முன்வைக்கிறது. தேர்தல் கால பிரசார வடிவமைப்புகள், எதிர்வினைகளை எதிர்கொள்ளல், சமூக வலைதள கதை கட்டல்களை கட்டமைக்கும் செயல்முறை பற்றி விவரிக்கிறது. புத்தகத்தை படித்து முடிக்கும்போது தேர்ந்த வியூக வகுப்பாளராக, மதியூகியான அரசியல் ஆளுமையாகி இருப்பதை உணர முடியும். கட்சித் தலைமையின் ஒழுக்கம், அரசியல்வாதியின் நேர்மை, உட்கட்சி முரண், ஜாதி அரசியல், சிறுபான்மையினர் நிலைமை, கூட்டணி கட்சி புலம்பல், ஊடக பரப்பல், அரசு சார்ந்த உத்தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவை துணைகொண்டு வார்ரூம் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. முன்பு அவசரகால நடவடிக்கைக்காக உருவாக்கப்பட்ட வார்ரூம், இன்று அரசியலில் இரவு பகலாக இயங்குவதை அறிய தருகிறது. இதில் பணியாற்றுவோர் பரந்த சமூக, அரசியல் பார்வை மற்றும் கூரிய அறிவோடு இருக்க வேண்டியதை தலையாய தகுதியாக குறிப்பிடுகிறது. அரசியலில் நுழையும் இளந்தலைமுறையினருக்கு, அரசியல் பயிலும் மாணவர்களுக்கு, பிற ஆர்வலர் களுக்கும் வியக்கத்தக்க செய்திகளை அள்ளி தருகிறது. சிறப்பான வடிவமைப்போடு தரமாக அச்சிட்டு வெளியிடப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. நிகழ்கால அரசியல் வியூக வகுப்பு அமைப்பு பற்றிய 51 அத்தியாயங்களுடன் களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை