காசி யாத்திரை
நீங்கள் காசிக்கு போயிருந்தால் கங்கையில் நீராடி இருப்பீர்கள். விஸ்வநாதரையும் விசாலாட்சி யையும் தரிசனம் செய்திருப்பீர்கள். அன்னபூரணியின் சிறப்பை பற்றி கேள்விப்பட்டு அவளை தரிசனம் செய்திருப்பீர்கள். அரிச்சந்திரன் துறையை ஆர்வத்துடன் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, காசிமா நகரில் புகழ்பெற்ற பல கோவில்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகள் இந்த புத்தகத்தில் உள்ளன. ஒரே கோவிலில் 150 சிவலிங்கங்கள், 43 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு, பக்தர்களே அபிஷேகம் செய்யும் வசதி... இப்படி ஒரு கோவில் இங்கு இருக்கிறது. இதை நீங்கள் பார்க்க வேண்டுமா? காசியிலேயே இறக்க வேண்டும் என விரும்பி பக்தர்கள் தங்குவதற்கு ஒரு இடம் இருக்கிறது. ஆனால் எத்தனை நாட்களில் இறக்க வேண்டும் என்ற விதிமுறையும் இருக்கிறது. இது போன்ற வித்தியாசமான தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமா? காசி விசுவநாதர் கோவிலில் தமிழகத்தின் ஒரு அமைப்பின் சார்பில் தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுவது உங்களுக்கு தெரியுமா? காசி கோவிலின் தற்போதைய பரப்பளவு எவ்வளவு ? காசிக்கு செல்பவர்கள் அயோத்தி, ப்ரயாக்ராஜ் ஆகிய தலங்களை பார்க்காமல் திரும்புவதில்லை. இங்கு ராமர் கோவில் மற்றும் திரிவேணி சங்கமத்தை தவிர்த்து வேறு என்ன விசேஷ கோவில்கள் எல்லாம் உள்ளன? காசிக்கு டிராவல்ஸ் மூலம் செல்வது சிறந்ததா? அல்லது தனிப்பட்ட முறையில் சென்று வருவது செலவை குறைக்குமா? மொழி தெரியாவிட்டால் என்ன செய்வது... ஆக எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியதாக இந்த புத்தகம் தகவல்களை வாரி வழங்குகிறது. இந்த புத்தகம். ஆசிரியர் ஆர். வி. பதி தன்னால் முடிந்த அளவுக்கு தகவல்களை சேகரித்து இந்த புத்தகத்தில் முத்து மாலை போல் கோர்த்துள்ளார். காசிக்கு முதன்முதலாக செல்பவர்கள் மட்டுமல்ல ஏற்கனவே சென்று வந்தவர்கள் கூட இந்த புத்தகம் கையில் இருந்தால் ஒரு இடம் விடாமல் காசியில் சுற்றி பார்த்து வரலாம். – தி. செல்லப்பா




