குமுதம் எஸ்.ஏ.பி.யின் அரசு பதில்கள் 1000
அரசு என்ற பெயரில் குமுதம் இதழ் நிறுவன ஆசிரியர் எஸ்.ஏ.பி., எழுதிய சுவாரசியமான கேள்வி – பதில்களின் தொகுப்பு நுால். ஒற்றை வரியில் துவங்கி, தகவல்கள் நிறைந்த மினி கட்டுரை போன்ற பதில்கள் வரை வியப்பு ஏற்படுத்துகின்றன. பொது அறிவு, அரசியல், நகைச்சுவை என சிந்தனையைத் தொடும், 1,000 ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. கேள்வி – பதில்கள், அவை வெளிவந்த காலத்தை காட்டும் கண்ணாடியாகவும், விமர்சனமாகவும் திகழ்கின்றன. பதில்கள் எழுதுவது குறித்து, ‘சோ, தமிழ்வாணன் ஆகியோர் பட்பட் என்று பதில்களை விளாசிவிடுவர். எனக்கு அப்படி வராது. முதலில் கேள்விகளை மட்டும் தேர்ந்தெடுத்து அனுப்பி விடுவேன். ‘அச்சு கோர்த்து புரூப் வந்த பிறகே பதில் எழுதுவேன்; எழுத முடியும். கண்டவர்களையெல்லாம் டியூப்லைட் என்று வர்ணிக்கின்றனரே, அடியேன்தான் டியூப்லைட்...’ என, எஸ்.ஏ.பி., ஒரு கேள்விக்கு விளக்கமாகவே தந்துள்ளார். அரசியலில் கட்சிகள் நிலை குறித்த கேள்வி க்கு, ‘எந்த கட்சி உயர்ந்தால் என்ன... எந்த கட்சி தாழ்ந்தால் என்ன, நாடு உயருமா என்பதே கேள்வி’ என சமூக பொறுப்பை வெளிப்படுத்துகிறது ‘மன்மதக்கலைக் கல்லுாரி முகவரி தேவை’ என்ற கேள்விக்கு, ‘உள்ளம், கேர் ஆப் கல்லுாரி மாணவர்’ என மனதை தொடுகிறது. ‘ஊழலில் கூட திட்டமிட்ட ஊழல், தற்செயல் ஊழல் இருக்கிறதா’ என்ற கேள்விக்கு, ‘விலைமகளும் கற்பை இழந்தவள்... அகலிகையும் கற்பை இழந்தவள்’ என்ற நுண்ணிய பதில் ஆச்சரியமூட்டுகிறது. இது போல ரசித்து படிக்கும் வகையில் உள்ளன. அரசு கேள்வி – பதில் பகுதி 1977ல் துவங்கப்பட்டு வாசகர்களின் ஆதரவை பெற்றது. ஒவ்வொரு பதிலும் சுவையுடன் படிக்கும் கோணத்தில் படைக்கப்பட்டுள்ளன. எஸ்.ஏ.பி., நுாற்றாண்டில் சிறப்பு வெளியீடா க மலர்ந்துள்ள நுால். – மதி




