மகான் இராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் (பிரம்ம சூத்திர விளக்கம்)
பக்கம்: 448 திருநாராயணபுரம் திருக்கோவில், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை, திருக்குலத்தார் என்று திருநாமமிட்டு வாழ்த்தி, அவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆலய வழிபாட்டிற்கு திருக்கோவில் கதவுகளைத் திறக்கச் செய்த வித்தகர் இராமானுஜர். வைணவத்தில் புத்துலகச் சிந்தனைகளை பதிவு செய்த புரட்சித் துறவி. அப்பெருமான் இம்மண்ணுலகில் ஏறத்தாழ 120 ஆண்டுகள் கி.பி.1018 - 1137 வாழ்ந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஞானகாரகர். பல நூல்களைத் தந்துள்ளார்.ஸ்ரீபாஷ்யம் ஒரு வடமொழி நூல். தர்க்கவாதங்களும், மறுப்புகளும் நிறைந்த சாஸ்திரம். அதை முழுமையாக கற்றுபுரிந்து கொள்ள வடமொழிப் பயிற்சி தேவை.நான்கு அத்தியாயங்கள், பதினாறு பாதங்கள், களங்கள் 156, பிரம்ம சூத்திரங்கள் 545, இத்தகைய சிறப்பு வாய்ந்த வடமொழி உரை நூலை தமிழில் ஸ்ரீரங்கம் சடகோப முத்து ஸ்ரீநிவாசன் தந்துள்ளார். இராமானுசரே முதல் கட்டளையாக ஸ்ரீபாஷ்யத்தைக் கற்றும், கற்பித்தும், வாழ்நாளை புண்ணியமாய் கழித்திட வேண்டும்" என திருவாய் மலர்ந்துள்ளார். நல்ல மொழி நடை, எளிய தமிழில் மூல நூலின் கருத்தும் ஆக்கமும் சிந்தாமல் சிதறாமல் உள்ளது உள்ளபடி தந்துள்ளார் நூலாசிரியர். வைணவப் பெருமக்களின் இல்லந்தோறும் இருக்கவேண்டிய ஞானப்பேழை.