மனோதிடம் ஒரு புதுமையான பெருங்கதை
பக்கம்: 608 படேலுக்கு ஞான பீட விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது இந்த நாவல். ஒரு கிராம வாசியான, இந்நூலாசிரியர் முறையான கல்வி பயிலாதவர் என்னும் செய்தி, நமக்கு வியப்பைத் தரும். அவரது அனுபவ அறிவு, நாவல் முழுவதும் வெளிப்படுகிறது.குஜராத்தின் கிராமப்புறத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாவல். 1900ம் ஆண்டுவாக்கில், அங்கு கோரத் தாண்டவமாடிய பஞ்சத்தின் விளைவுகளைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. எளிய வாழ்வு நடத்தும் விவசாயிகள், அவர்களது அன்றாடப் பழக்க வழக்கங்கள், விவசாய முறை, அவர்களது கொண்டாட்டங்கள், மழை பொய்த்து நிலம் வறண்ட பின், தண்ணீருக்காக அவர்கள் படும்பாடு, பஞ்சத்தினூடே மலைகளிலிருந்து திடீரென இறங்கி வந்து, கிராமங்களைச் சூறையாடி விட்டுப் போகும் கொள்ளைக்காரர்கள்.புளியம்பூக்களையும், மரப் பட்டைகளையும் சமைத்து, தண்ணீரில் கரைத்துக் குடித்து பசியை ஓரளவு ஆற்றிக் கொள்ளும் அவலம். இவற்றினூடே சாலுவிற்கும் ராஜீ என்ற பெண்ணுக்கும் மலரும் காதல் என்று விரியும், இந்த நாவல் பிறமொழி நாவல்களில், அவசியம் படிக்க வேண்டும் என்ற தகுதியைப் பெறுகிறது.