முக்குலத்தோர் சரித்திரம்
தமிழக வரலாற்றில் முக்குலத்தோர் இன மக்களின் பங்களிப்பை, பண்டைய வரலாற்றுப் பார்வையில் விவரிக்கும் நுால். கள்ளர், மறவர், அகமுடையாரை இணைத்து முக்குலத்தோர் என்பர். இந்த இனத்தின் வரலாற்றுப் பண்பாட்டு அடிப்படையில், ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய நாட்டார்கள் சரித்திரம், வி.எஸ்.குழந்தை வேலுச்சாமி மற்றும் வி.எஸ்.ஆசிர்வாத உடையார் தேவர் எழுதிய மறவர் சரித்திரம் மற்றும் ஆண்டியப்ப தேவர் எழுதிய அகமுடையார் வரலாறு ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது. களப்பிரரையும் இக்குலத்தில் இணைத்துப் பார்த்துள்ளனர். முக்குலத்தோரில் பல உட்பிரிவுகள் உண்டு எனத் தெரிகிறது. தென்னகத்தில் ஆட்சி உரிமை பெற்றிருந்த மூவேந்தர்களில் சேரர் – அகமுடையார் என்றும், சோழர் – கள்ளர் என்றும், பாண்டியர் – மறவர் என்றும், மூவரும் ஒரே வம்சாவளியினர் எனவும் குறிப்பிட்டுள்ளது. முக்குலத்தோர் வரலாறு, பண்பாடு, ஆட்சி நிர்வாகத்தை அறிய உதவும் நுால்.– ராம.குருநாதன்