நலம் தரும் திருக்குறளும் திருமந்திரமும்
பக்கம்: 228 3000 ஆண்டுகட்கு முன் மலர்ந்த திருக்குறள், 3000 ஆண்டுகளுக்கு முன் அருள் சுரந்த திருமந்திரம், 1,330 திருக்குறட்பாக்கள், 3,000 பாடல்கள் கொண்ட திருமந்திரம்; இவ்விரு ஞான நூல்களை ஒப்பிட்டு , எல்லோரும் வியக்கும் வண்ணம், அதே சமயம் ஆய்வுக்குரிய செய்திகளை 228 பக்கங்களில், அழகு தமிழில் மிக எளிமையாய் தருவது இயலுமா? என்று யோசிக்கலாம்.திருமந்திரத்தை எட்டு ஆண்டுகளாய், 3,047 பாடல்களையும் உரையாற்றிய ஆசிரியர், இதை இந்த நூலில் நிருபித்துள்ளார். வல்லமை தாராயோ மாநிலம் பயனுற வாழ்வதற்கே என, எட்டயபுரத்துக் கவிஞன் கொள்கையில் நான் வாழ்பவன் என, நெஞ்சுயர்த்திக் கூறும் நூலாசிரியரது படைப்பு மிக மிக அருமை.நிறைமொழி மாந்தர் யார்? என்று வினா தொடுத்து, மதுவும், மாதுவும் என 18 கட்டுரைகளாக நூல் அமைந்துள்ளது. திருமூலர் வரலாறு (பக்கம் 47 - 66), திருவள்ளுவர் வரலாறு (பக்கம் 67 - 84 )ஆகிய இரண்டுகட்டுரைகளில் திரு மூலர் கால ஆய்வும், திருவள்ளுவர் கால ஆய்வும் பல ஆய்வாசிரியர்களது செய்திகளோடு பதிவு செய்திருப்பது, மிக மிக அருமை.திருவள்ளுவரும், திருமூலரும் இறைவனை உருவமற்ற நிலையிலேயே முடிவில் உணர்த்துகிறார்கள் (பக்கம் 99)"மாமறை ஓதல் என்ற செய்தியில், திருமந்திரத்தோடு திருக்குறளையும் ஒப்பிட்டு (பக்கம் 115) திருக்குறளில் வருகின்ற "ஓதி என்ற சொல்லும், "ஒத்துஎன்ற சொல்லும் வேதத்தையே குறிக்கிறது என்ற ஆய்வு, முனைவரது ஆழங்கால் புலமைக்கு எடுத்துக்காட்டு.இதுபோன்ற நூற்றுக்கணக்கான செய்திகளை, இச்சிறு புத்தகத்தில் ஆய்வுப் பார்வையில் பதிவு செய்திருப்பது நம்மை வியக்க வைக்கிறது. ஞானியார் அடிகளிலிருந்து, நேற்றைய புலவர் கீரன் வரை விட்டுச் சென்ற ஆன்மிகத் தமிழ்ப் பொழிவுகளின் விழுதாய் நின்று, இன்று சொற்பொழிவு ஆற்றி வருகின்ற ரமணன் அவர்களது நூல், ஒவ்வோர் தமிழனிடத்திலும் இருக்க வேண்டிய ஞானக் கருவூலம்.