ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது
தன், 75 வயது வாழ்க்கையைத் தொகுத்து, சுயசரிதம் ஆக்கியிருக்கிறார் பூங்குன்றன். மருத்துவமனைகளில் பணிபுரிந்த ஒரு ரேடியோகிராபரின் வாழ்க்கைப் புத்தகம்தானே என்று புறந்தள்ளிவிட முடியாத அளவு சுவையான பக்கங்கள், எளிய நடையில்! தன் கிராமத்து வினோத சடங்குகள், கள்ளழகர் வைகையில் இறங்கும் சித்திரைத் திருவிழா, தாலியைக் கடனாக வாங்கிக் கட்டித் திருமணம் முடிப்பது, மணமகன் கையால் தாலி கட்டாத திருமண மரபு போன்றவையோடு, அன்றைய பாச உறவுகள், சகோதர பாசம் என்று பல நிகழ்வுகளைக் கூறி நெகிழ்கிறார். கிராமத்தில் தன்மானத்தோடு வாழ்ந்து விட்டு சென்னையில் இலவச அரிசி வாங்கிய சூழ்நிலை, நேர்மையற்ற சக ஊழியர்கள் தந்த மன உளைச்சலால், கோபத்தில் அரசுப் பணியையே தூக்கி எறிந்துவிட்டுத் தனியார் மருத்துவமனையில் சேர்ந்த அவலம் என்று பல கசப்பான அனுபவங்கள்!தன் ஊரைச் சேர்ந்த அமைச்சர் கக்கனின் மனிதநேயம், சிறுநீரகப் பரிசோதனைக்காகத் தந்தை பெரியாரை எக்ஸ்ரே எடுத்தது, தமிழக முதல்வராக இருந்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த அண்ணாதுரை காட்டிய கண்ணியம் என, நெகிழ்வும் பரபரப்பும் மிக்க பக்கங்கள்!கவிஞர் பிரபாகர பாபு