பாண்டியர் காலச் செப்பேடுகள்
தமிழ்நாட்டு வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்படவில்லை. சோழர் வரலாறு, சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு என, அறிஞர்களால் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுகளும், செப்பேடுகளும், பழந்தமிழ் நூல்களும் இவ்வரலாறுகளுக்கு ஆதாரமாக இருப்பவை.பாண்டியர் வரலாறு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு துவங்கி, கி.பி., 17ம் நூற்றாண்டு வரை உள்ள, கால அளவு கொண்ட நீண்ட வரலாறு. மிகச்சிறந்த ஓர் ஆய்வு நூலை, நூலாசிரியர் அரிய படைப்பின் பயனாகத் தமிழுலகிற்குத் தந்துள்ளார். இவருக்கு முந்திய ஆய்வாளர் பலரின் ஆய்வு நூல்களையும், ஆவணங்களையும், செப்பேடுகளையும் அடிப்படையாக வைத்து, இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.பரந்து விரிந்த பழைய வானில் புது நிலவெனத் தமிழக வரலாற்றுப் பரப்பில் ஒளிபரப்புவதாக, ஆசிரியர் பற்றி பேராசிரியர் கோவிந்தராசனார் குறிப்பிட்டிருப்பது மிகப்பொருத்தம். தமிழ் இலக்கிய வரலாறு பாண்டி நாட்டிலிருந்தே துவங்குகிறது. தமிழரசர்களின் முன்னோடி பாண்டிய மன்னர்களே. இந்த மன்னர்களின் வரலாற்றை அறியப் பயன்படும் வேள்விக்குச் செப்பேடுகள், சின்னமனூர் செப்பேடுகள், சிவரமங்கலச் செப்பேடு, சுசீந்திரம் செப்பேடு உள்ளிட்ட இருபத்தைந்து செப்பேடுகள், இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிற்பங்களின் ஒளிப்படங்கள், பாண்டிய மன்னர்களின் படங்களாக நவீன ஓவியங்கள், பல்வேறு வகையான பட்டியல்கள், ஆட்சித் தலைவர்கள், பெறப்பட்ட வரிகள், தரப்பட்ட தானங்கள் என, நூல் முழுவதும் செய்திகள் நிரம்பியுள்ளன.நூலின் கட்டமைப்பும், அச்சாக்கமும், தாளின் தரமும், எழுத்தும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமல்லாது. எவரும் படித்தறிய வேண்டிய, படித்து மகிழத்தக்க, நல்ல நூல் இது.