பரிபாடல்
செம்மொழியாம் தமிழுக்குப் பெருமை சேர்ப்பனவற்றுள் எட்டுத்தொகை நூல்கள் இன்றியமையாதனவாகும். எட்டுத் தொகை நூல்களிலும், "ஓங்கு பரிபாடல் என்ற சிறப்பு அடைமொழியுடன் விளங்கும் இந்நூல் ஓர் இசை நூலாகும். இந்நூலுக்கு பரிமேலழகர் முதலில் உரை எழுதினார். பின்னர் பலரும் உரை எழுதியுள்ளனர். இவ்வுரை நூல், பரிமேலழகரின் உரையை அடிப்படையாகக் கொண்டு பழகு தமிழில் மிக எளிமையாக நூலின் பொருளை அறிந்து கொள்ள எழுதப்பட்டுள்ளது. பரிமேலழகரின் உரையில் சில இடங்கள் விளங்காமல் இருக்கலாம். இவ்வுரையாசிரியர், அத்தகு இடங்களில் பெரிதும் முயன்று பொருள் விளக்கம் தந்துள்ளார். எடுத்துக்காட்டாக, பரிபாடல் (2)-61ஆம் அடியான, "கேள்வியுட் சிறந்த ஆசான் உரையும் என்பதற்கு, "அவனுரையாவது வேதத்துள் நான்காம் வேற்றுமையை ஈறாக உடைய தெய்வப் பெயர்ச்சொல் என்ற உரைக்கு இவ்வுரையாசிரியர், வடநூல் வல்லுனர்களிடம் கேட்டு அறிந்து, "இந்திராய சுவாகா, எமாய சுவாகா, நாராயணாய சுவாகா என்று வருவனதான் மேற்படி தெய்வப் பெயர்ச்சொல் என்று எழுதியுள்ளதிலிருந்து ஆசிரியரின் கடும் உழைப்பைக் காணலாம். வையை பற்றிய பரிபாடல் விளக்கத்தில், "திருமருதமுன்துறை என்ற இடம், இன்றைய மதுரை மாநகரமே என்றும், இன்றும் பேச்சு வழக்கில் சிலர் "மருதை என்று அழைப்பதையும் சுட்டிக்காட்டி விளக்குவது ஆசிரியரின் நுண்மான் நுழைபுலம்மிக்க அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாகும். தமிழர் இல்லங்களிலும், நூலகங்களிலும் இருந்து பலருக்கும் பயனளிக்கும் அருமையான உரை நூல்.