சைவ இலக்கிய வரலாறு
பக்கம்: 382, கடந்த 1959ம் ஆண்டு முதற்பதிப்பாக வெளிவந்த இந்நூல், கி.பி. 7 முதல் 10ம் நூற்றாண்டு வரையிலான, சைவ இலக்கிய வரலாற்றை உள்ளடக்கியது. நாளும் இன்னிசையால், தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் துவங்கி, மற்பந்த மார்பன் மணியன் மகன் மதில் வேம்பையர் கோன் நற்பந்தமார் தமிழ் நாராயணன் ஈறாக, 14 சைவப் பெரியார்களின் இலக்கிய வரலாறு, தமிழக வரலாற்றுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சைவ இலக்கிய நூல்கள் பலவற்றிற்கு, முன்னோடி நூலான இதில், சமயக் குரவர் நால்வர் மட்டுமின்றி, சேரமான் பெருமான், ஏனாதி சாத்தஞ்சாத்தனார், பட்டினத்துப் பிள்ளையார், சேந்தனார், அவ்வையார், முதற்கண்டராதித்தர், நம்பியாண்டார் நம்பி, வேம்பையர் கோன் நாராயணன் ஆகியோரது இலக்கியங்களும் அவற்றின் சிறப்பும், வரலாற்று நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்தி மொழி பேசும் மக்களுக்கிருக்கும், மொழிப் பற்றில், நூற்றில் ஒரு கூறு தானும் தமிழர்க்கு அமையுமாயின் எத்துணையோ நலங்கள், தமிழ்த் துறையில் தோன்றி விடும், இன்னும் அது தோன்றவில்லை (பக்.361) என்று, 58 ஆண்டுகளுக்கு முன் நூலாசிரியர் கொண்ட ஆதங்கம் இன்றளவும், நீடிப்பது தான் வேதனையான ஒன்று. முன்னோடி நூல் என்பதால், பலருக்கும் இது பயன் தரும் என்பதில் ஐயமில்லை.