/ சமயம் / சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி - 4

10 தொகுதிகளும் பக்கம்: 7,200 திருக்கோவில்கள் இல்லாத ஊர்களை, அவை ஊரல்ல. அடவிகாடே என்பார் திருநாவுக்கரசு சுவாமிகள். நம் தமிழ்த் திருநாட்டில் திருக்கோவில்கள் இல்லாத ஊரைக் காண்பது அரிது. திருக்கோவில்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல.அவை பல்கலைக்கழகங்களாக, பண்பாட்டு நெறி காட்டும் கேந்திரங்களாக விளங்கி வந்துள்ளன.அவ்வரிசையில், பன்னிரு திருமுறைகளிலும் குறிக்கப்பெறுகின்ற, நானூற்று எண்பத்தேழு தலங்களை பற்றிய அரிய செய்திகளை முழுமையாக முதன் முதலில் தொகுத்து ஒரு அறிவுப் பெட்டமாக சைவ சமயக் கலைக் களஞ்சியம் - திருமுறைத் தலங்கள் என்ற தலைப்பில் முனைவர் ரா. செல்வக்கணபதி, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கி இருக்கிறார். இந்நூல், அவர் படைத்துள்ள சைவ சமயக் கலைக் களஞ்சியம் பத்துக் தொகுதிகளில் நான்காம் தொகுதியாகும்.ஒவ்வொரு திருமுறைத் தலத்தை பற்றிய, பல்வேறு தகவல்கள் அடங்கிய செய்திகளை, அங்கு திகழும் வண்ணப்படங்களை கண்டு திளைத்தவாறு, படிக்கும் போது அத்தலத்தையும், இறைவன் இறைவியையும், தல மரத்தையும், தீர்த்தத்தையும் தரிசித்த பேறு பெறுகிறோம். கண்ணுக்கு குளிர்ச்சியான, மென்மை வண்ணத்தோடு கூடிய ஒவ்வொரு பக்கத்திலும், பளிச்சென காணப்பெறும் ஒளிப்படங்களும், தெளிவான அச்சுப் பதிப்பும் இக்களஞ்சியப் படைப்பின் வெற்றிக்கு ஒரு காரணமாகும்.ஆறை மேற்றளி (பக்.59), இடவை (பக்.63), இடைக்குளம் (பக்.66), ஆகிய தலங்கள் பற்றிய, தரவுகள் உள்ள இடங்களில் காணப்பெறும் சிவலிங்கங்களின் படங்கள் தொடர்பின்மையால், அத்தலத்திற்குரியவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது போன்றே திருக்கழுக்குன்றம் பற்றி விவரிக்குமிடத்து காணப்பெறும் கழுகின் படம் கிருஷ்ண பருந்தாகவுள்ளது. அவ்வூரில் முன்பு உணவு உண்ண வந்து செல்லும் பட்சிகள் வெள்ளை கழுகுகளாகும். மேற்கூறிய படங்களை தவிர்த்திருக்கலாம். இது தவிர, தலச் செய்திகள் அனைத்தும் கருத்தாழமும் செறிவும் உடையவை என்பதில் மாறுபட்ட கருத்திருக்க வாய்ப்பில்லை.இக்களஞ்சியத்தில் குறிக்கப்பெறும், வைப்புத்தலங்கள் சிலவற்றின் தற்காலப் பெயர்கள் யாது என, அறிய முடியாமல் வருந்தும், தலைமைப் பதிப்பாசிரியரின் ஏக்கமும், தாபமும் களஞ்சியம் படிப்போர்க்கு புலப்படும். அண்மையில் மேற்கொள்ளப் பெற்ற களஆய்வில் கிழையம் என்ற வைப்புத்தலம் சோழநாட்டு நன்னிலம் வட்டத்தில், அச்சுத மங்கலத்திற்கு அருகிலுள்ள கிழையம் எனும் சிற்றூர் என்பதனை அறிய இயன்றது. அங்குள்ள கோவில் கல்வெட்டுக்கள் அவ்வூரைக் கிழையம் என்றே குறிக்கின்றன. அது போன்றே ஐயடிகள் காடவர் கோன்சேத்திர வெண்பாவில் கூறும் 23 தலங்கள் வரிசையில், ஒரே ஒரு ஊரான உஞ்சேனை மாகாளத்தை மட்டும் ஏன் வடநாட்டுத் தலமாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அது தமிழ்நாட்டு தலமாக இருத்தல் கூடாதோ என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட போது, தஞ்சாவூர் மாவட்டம் நியமம் (மாகாளம்) எனும் ஊரின் ஒரு பகுதியாக விளங்கும் உஞ்சினி என்ற ஊரில் உள்ள அழிந்துபட்ட ஆலயமே உஞ்சேனை மாகாளம் என்பதை தொல்லியல் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய இயன்றது. இத்தகவலை, நான் பேராசிரியருக்கு தெரிவித்திருந்தால், இக்களஞ்சியத்தில் அவற்றை இடம் பெறச் செய்திருப்பர்.ஆய்வுத் துறையில் ஈடுபட்டுள்ளோர், தாங்கள் சான்றாதரங்களுடன் திருத்தலங்கள் பற்றி அறியும் புதிய செய்திகளை, அவ்வபோது தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளைக்கு தெரிவித்தால் எதிர்காலத்தில் சைவ உலகம் நிச்சயம் பயன் கொள்ளும்.சைவ சமயக் கலைக்களஞ்சியத்தின் நான்காம் தொகுதியான, திருமுறைத் தலங்கள் எனும் இவ்வறிவுப் பெட்டகம், ஒவ்வொரு தமிழன் இல்லத்தின் புத்தக அலமாரியிலும் நிச்சயம் இடம்பெற வேண்டிய ஒரு நூலாகும.


முக்கிய வீடியோ