சிந்தனைக்கு ஜென் கதைகள்
கட்டுரைகளாலும், பொன்மொழிகளாலும், உரைகளாலும் அடைய முடியாத பக்குவ நிலையை நீதிநெறிக் கதைகளால் கொடுத்துவிட முடிகிறது. தத்துவங்கள் நிறைந்த ஜென் கதைகளுக்கென்று ஒரு வடிவம், அளவீடு, மரபு உண்டு. கதைக்குள் ஒரு திருப்புமுனைச் சிந்தனை உண்டு. பவுத்த மதத்தின் தொடக்கத்தின் பின்னர் அதிலிருந்து கிளைத்த பவுத்த பிரிவுகளைத் தொடர்ந்து அங்கிருந்து உருவானதே ஜென். ஜப்பா னில் பன்னிரண்டாம் நுாற்றாண்டில் ஜென் வழி அறிமுகமானது. தியானம் என்று சொல்வதே ஜப்பானில் ஜென். நல்வாழ்வுக்கான நீதி நெறிகளையும், நடுநிலையையும் கற்பிப்பதற்காக நாட்டுக்கு நாடு மாறுபட்ட கதைகள் உள்ளன. பாட்டி சொல்லும் கதைகள், நாடோடிக்கதைகள், தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் எனப் பலவகைக் கதைகள் உள்ளன. ஜென் கதை கள் வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டவை. செறிந்த தத்துவக் கதைகளும் அரை பக்கத்தில் முடிந்து அசர வைத்துவிடும். இந்நுாலில் நுாறு ஜென் கதைகளைச் சரமாகத் தொடுத்து வழங்கியிருக்கிறார், தொகுப்பாசிரியர் பழனியப்பன். பெரும்பாலான கதைகள் ஏதோ ஒரு தத்துவார்த்த தாக்கத்தை வாசிப்போர் மனதில் பதித்துவிடுகின்றன. இவற்றால் வாசிப்போர் மனம் நெறிப்படலாம். ‘நீ இறக்க, உன் மகன் இறக்க, உன் பேரன் இறக்க...’ என்று குடும்ப இறப்புகளை உணர்த்தும் ஜென் மொழி அருமை. கால நிர்ப்பந்தம் வைத்து ஞானம் பெற்றுவிட முடியாது என்பதும், வெளிப்படுத்த முடியாதவையே சொற்பிழையாக வெளிப்பட்டு விடுகின்றன என்பதும் நினைவில் வைக்க வேண்டிய தத்துவக் கீற்றுகள். சாமானிய வாசிப்புக்குப் புலப்படாத கதைகளையும், தற்கால வாசிப்புக்குப் பொருந்தாத கதைகளையும், படங்களையும் தவிர்த்திருக்கலாம்.–மெய்ஞானி பிரபாகரபாபு