ஆன்மிக குறுக்கெழுத்துப் புதிர் (பாகம் – 1)
‘கேள்வி எழுப்பு அறிவு வளரும்’ என்றார், கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். ‘கேள்வி கேட்பவர்களே அறிவுள்ள குழந்தைகள்’ என்றார், நம் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் அப்துல் கலாம். ஒரு தேர்வை எடுத்துக் கொள்வோமே! கேள்வித்தாள் தரப்படுகிறது. அதற்கு எந்த அளவுக்கு விடை தருகிறோமோ, அது தரும் மதிப்பெண் தான், வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. பாரதத்தின் உயிர்நாடியே ஆன்மிகம் தான் என்பார் சுவாமி விவேகானந்தர். அந்த ஆன்மிகத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் போது, அது எவ்வளவு பெரிய கடல் என்பது புரிய வரும். பாண்டவர்களின் தாய் குந்தி. இதையே துரியோதனனின் சித்தி என்று கேட்கும் போது சிறு குழப்பம் வரலாம். அப்போது, குந்தியின் வரலாற்றை படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஒரு கேள்வியில் இருந்து இதிகாசத்தையே படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்து விடும். இந்த நோக்கத்தில் தான், ‘தினமலர்’ ஆன்மிக மலர் குறுக்கெழுத்துப் போட்டியை நடத்துகிறது. இதற்கான கேள்விகளை தொகுப்பது என்பது, ஒவ்வொரு வாரமும், ஒரு பிரசவ வேதனையை அனுபவிப்பது போன்றது தான். அந்த வேதனை, அழகான ‘கேள்வி’ குழந்தைகளை பெற்றுத் தந்திருக்கிறது. இந்த கேள்விகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது தான் ஆன்மிக குறுக்கெழுத்துப் புதிர் என்ற இந்த புத்தகம். இளைய தலைமுறைக்கு பெரியவர்கள் ஆன்மிகம் பற்றிய அறிவை ஊட்ட, இது ஒரு சிறந்த புத்தகம். இந்த புத்தகத்தை வாங்கினால், 50 புதிர் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள 2,000 கேள்விகளுக்குரிய பதிலை தெரிந்து கொள்ள முடியும். ஒரு புதிரை தொட்டால், அடுத்த புதிர் தொகுப்பையும் இப்போதே முடித்து விடுவோமே என்ற ஆர்வத்தை தானாகவே தந்து விடுகிறது. பெரியோர்களுக்கு ஒரு நினைவூட்டல் ஆகவும், இளைஞர்களுக்கு ஆன்மிக விஷயங்களை கற்றுக் கொள்ளவும் வழிகாட்டியாக இருக்கிறது. பள்ளிகளில் நடக்கும் வினாடி – வினா போட்டிகளுக்கு, இதில் இருந்து வினாக்களை தொகுக்கலாம். நேர் வழியை கற்பிக்கும் குறுக்கெழுத்து புத்தகம். – தி.செல்லப்பா




