ஸ்ரீராமானுஜர் வாழ்வும், தொண்டும்
பக்கம்: 136 வைணவர்களால் போற்றி வணங்கப் பெறுபவரும், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தவருமான மகான் இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை முறைப்படி தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் ஜெகதா.ஒன்றே குலம் என்று எல்லோரையும் சமமாகக் கொண்டாடிய உத்தமர் ராமானுஜர். குருவின் ஆணையையும் மீறி, திருக்கோட்டியூர் சவும்ய நாராயணப் பெருமாள் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி நின்று, எல்லோரையும் உரத்த குரலில் அழைத்து, குருவின் மூலம் தான் அறிந்த, திருவெட்டெழுத்து மந்திர ரகசியத்தை உரக்கக் கூறினார். இதுகுறித்துக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பியிடம், "இதனால் நரகம் பெற்றேன் என்பதறிவேன். அடியேன் நரகம் புகினும், இதைக் கேட்ட எல்லோரும் பரமபதம் புகுவரே என்பதால் இவ்வாறு செய்தேன் என்றார். பிறர் நலத்திற்காகத் தன்னலம் துறந்து, மகான் ஆனார் என்பது விரிவாக விளக்கப் பெற்றுள்ளது.இறுதியில், ராமானுஜரின் வாழ்க்கைக் குறிப்பு (ஆண்டுகளைக் குறிப்பிட்டு) கொடுக்கப்பட்டுள்ளமை நன்று.