தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு
தினமலர் வாரமலர் இதழில் வெளியாகும், அந்துமணி கேள்வி – பதில்கள் பகுதியை பற்றிய ஆய்வு நுால். அரசியல், திரைப்படம், நாட்டு வளர்ச்சி, பொருளாதாரம், அறிவியல், சுற்றுப்புறச் சூழல், குடும்பம், பெண்கள் பற்றி அந்துமணி பதில்களை வகைப்படுத்தி அலசப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவற்றில் அந்துமணி பதில்கள் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, பெண்கள் முன்னேற்றம் குறித்த ஒரு கேள்வி...கேள்வி: நல்ல கணவன், மேற்படிப்பு இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தாக வேண்டிய நிலை. ஒரு பெண் எதைத்தேர்வு செய்வது நலம்? பதில்: இரண்டாவதைத்தான். கல்வி அறிவு நல்ல உயர் பதவியைப் பெற்றுத்தரும். அது வாழ்வை எதிர்கொள்ள தைரியத்தைக் கொடுக்கும்! நல்ல பணி இருப்பதால் வரன்கள் ‘க்யூ’வில் நிற்பர்.கேள்வி – பதில் பகுதி எப்படி, எப்போது துவங்கப்பட்டது...வாசகர்களின் கருத்து போன்ற தகவல்கள் அருமை. வாரமலர் ஆசிரியரின் நேர்காணல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது நுாலுக்கு பெருமை சேர்க்கிறது.–ஜி.வி.ஆர்.,