தாய்லாந்து ராமாயணம்
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84ராமாயணம் கீழை நாடுகள் முழுவதும் அவரவர் குடும்பக் கதைபோல பரவியுள்ளது. இன்று அந்த நாடுகளுக்கு நாம் செல்லும்போது நம் சொந்த மண்ணை மிதிப்பது போன்ற ஓர் உணர்வு தோன்றினால், அந்த உணர்வுக்கு வித்திட்டவை ராமாயணமும் மகாபாரதமுமே ஆகும். ஆனால் அந்தந்த நாடுகளின், மக்களின், மண்ணின் தன்மைக்கேற்ப அவை சற்றே இயல்பு மாறி அமைந்திருப்பதை நாம் காணலாம். அவற்றில் மிகவும் வித்தியாசமாகவும், மண்ணின் ரசனைக்கேற்ப மாற்றம் பெற்றதாகவும் திகழ்கிறது, தாய்லாந்து நாட்டின் ராமாயணம். அது பல கவிஞர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகத் தெரியவருகிறது. அவற்றில் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னர் முதலாம் ராமன் அதிபதி எழுதிய ராமகியான் என்ற இந்த ராமாயணம், தாய்லாந்தில் தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ராமாயணத்தில் தாய்லாந்தின் தன்மைக்கேற்ப அனுமன், பிரம்மசர்ய நிலை களைந்து, திருமணங்கள் செய்து கொண்டவராகக் காட்டப்படுகிறார். வாலி, சுக்ரீவன் கதையும், அந்தக் கதாபாத்திரங்களின் பெயர்களும்கூட நமக்கு பழக்கப்பட்ட, ஆனால் சற்றே வித்தியாசமான பெயர்களுடன் உலாவருகின்றன. இருப்பினும் அடிப்படைக் கதையமைப்பு, நம் நாட்டின் வால்மீகி ராமாயணத்தின்படியே இருக்கிறது. இந்த ராமாயணக் கதை நூல், மிகவும் சுவாரஸ்யமாக, படிப்போர் உள்ளத்துக்கு குதூகலம் தரும் வகையிலான கதையமைப்போடு திகழ்கிறது. இதை தன் எளிய தமிழ் நடையில் சுருக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன். நமக்கு ஏற்கெனவே பழகிய ஒன்றாக வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் திகழ்வதால், இந்தத் தாய்லாந்து ராமாயணத்தை நாம் படிக்கும்போது ஏற்படும் கதை வேறுபாட்டை அங்கங்கே கொடுத்து, அதன் மாறுபாட்டையும் விளக்கியுள்ள பாங்கு நமக்கு தெளிவைக் கொடுக்கிறது.