திலகரும் தமிழ்நாடும்
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை- 600 004. (பக்கம்: 448) கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சி., 1933ம் ஆண்டு காலகட்டத்தில், இலங்கை "வீரகேசரி நாளிதழ், "பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் ஜீவிய சரிதை என்னும் தலைப்பில் எழுதிய 19 கட்டுரைகள் இந்த நூலின் கண் தொகுக்கப் பெற்றுள்ளன. "வீரசேகரி நாளிதழின் பழைய பிரதிகளின் நகலை, இலங்கை தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து பெற அரும்பாடுபட்டிருக்கிறார் பெ.சு.மணி. விளைவு, இந்திய விடுதலைப் போரின் மிக முக்கிய நாயகர்களில் ஒருவரான லோகமான்ய பாலகங்காதர திலகரின் திவ்ய சரிதத்தையும், ஒப்பற்ற போராட்டங்களையும் நாமறிய உதவும் இந்நூல். திலகர் மீது ஆழ்ந்த பற்றுடையவர்கள் வ.உ.சி.,யும் மகாகவி பாரதியும். சுதந்திரப் போராட்டத் தமிழக வரலாற்றை பாரதியை மையமாக வைத்துப் பல்வேறு கோணங்களில் பல நூல்கள் எழுதியவர் பெ.சு.மணி. இந்நூலிலும் திலகரை பாரதி, வ.உ.சி., போன்றோர் சந்தித்துப் பழகியது, திலகர் சகாப்தத்தில் அவருடன் தமிழகத்திற்கு உள்ள தொடர்பு போன்ற எல்லாவற்றையும் விரிவாகப் பல தலைப்புகளில் விவரித்துள்ளார். திலகர் தமிழ்த்தாத்தா உ.வே.சா., அவர்களைச் சந்தித்தது போன்ற சுவாரசியமான தகவல்கள் நிறைய உள்ளன. தேச பக்தி உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல் இது.