/ கதைகள் / உன்னையே ரதி என்று...

₹ 375

மென்மையான மனமும், நட்பும் உடைய இரண்டு இளம்பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் சிவராணி; பெற்றோரை இழந்ததால் அண்ணன், அண்ணி பராமரிப்பில் வசிக்கிறாள். இவளது நெருங்கிய தோழி லேகா, மிகவும் வசதி படைத்தவரின் ஒரே மகள். வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை, தோழியின் அறிவுரைக்கு ஏற்ப அமைக்கும் இயல்புடையவள். லேகாவுக்கு மணம் முடிக்க தீர்மானம் செய்கிறார் தந்தை. மணமகனை பிடித்து போக, நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சிவராணி கூறிய தகவலால் தோழியின் திருமணம் தடைபடுகிறது. இந்த கவலையால் லேகாவின் தந்தைக்கு மரணம் நிகழ்கிறது. மன அழுத்தத்துக்கு உள்ளாகும் சிவராணியை மணமுடிக்க, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் விரும்புகிறான். அவனது நடத்தையில் வெளிப்படைத்தன்மை இல்லை. சந்தேகத்தால் திருமணம் கைகூடாமல் போகிறது. சிவராணியை, சிங்கப்பூரைச் சேர்ந்த மாப்பிள்ளைக்கு மணம் முடிக்க ஏற்பாடு நடக்கிறது. கடைசியில் அதுவும் தடைபடுகிறது. வாழ்க்கையில் தனக்கு திருமணமே நடக்காது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறாள் சிவராணி. நம்பிக்கை இழந்து பல்வேறு தொல்லைக்கு உள்ளாகிறாள். மிகவும் வெளிப்படையாக பேசும் அவளது பண்பு மாறுகிறது. தொடர்ந்து புதிர்களுடன் கதை நகர்கிறது. உணர்ச்சி மிகுந்த திருப்பங்களுடன் சுவாரசியம் தருகிறது. சிவராணிக்கு திருமணம் நடைபெற்றதா... லேகாவின் வாழ்க்கை என்னவானது... மணிகண்டனின் உண்மையான முகம் என்ன... போன்ற முடிச்சுகளை அவிழ்ப்பது தனித்தன்மையுடன் அமைந்து உள்ளது. குமுதம் இதழ் நிறுவிய ஆசிரியர் எஸ்.ஏ.பி., உருவாக்கிய படைப்பு, அவரது நுாற்றாண்டில் சிறப்பு வெளியீடாக மலர்ந்துள்ளது. – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை