வீழ்வேன் என்று நினைத்தாயோ?
‘இருப்பதெல்லாம் ஒன்று தான்; அதுவும்கூட அன்பு தான்!’ இந்த இரட்டை வரி சூத்திரத்தை வைத்துக் கொண்டு, முந்நுாற்று சொச்சம் பக்கங்களில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ள கதை நுால். ஆன்மிக புத்தகப் போட்டியில் நுாலாசிரியருக்கு கிடைக்க வேண்டிய முதல் பரிசு, அங்கீகாரம், புகழ், பெருமை எல்லாமே தட்டிப் பறிக்கப்படுகிறது. யாரால் அவை பறிபோனதோ, அவரையே வாழ வைக்கும் பொறுப்பை நுாலாசிரியருக்கு கொடுக்கிறாள் பச்சைப் புடவைக்காரி. இதுதான் கதையின் கரு. புகழ் பெற்ற எழுத்தாளர் உமா நந்தகுமார். அவளது அடுத்த நாவலுக்காக பல நாட்டு வாசகர்கள் காத்திருக்கின்றனர். ஒரு முடிவேயின்றி 14 ஆண்டுகள் தித்தித்த உமாவின் திருமண வாழ்க்கை திடீரென்று முடிந்து விடுகிறது. உடன் வேலை செய்த பெண்ணை, அவளது கணவன் இழுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். தற்கொலைக்கு முயன்ற உமாவை காப்பாற்றுகிறார், அவளது புத்தக பதிப்பாளர். கயிலாயத்தில் இருக்கும் உமா மகேஸ்வரி, பூவுலகில் இருக்கும் எழுத்தாளரான உமா நந்தகுமாரை எப்படி வாழ வைக்கிறாள் என்பதை உருக்கமுடன் உரைக்கிறது. கதையில் சிறிய பாத்திரங்கள் கூட பெரிய பாடங்களை சொல்லித் தருகின்றன. செய்யாத தவறால் தன் தொழிலையும், மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் தொலைத்த கவுதம் என்ற இளம் தணிக்கையாளன் பாத்திரம் மிகவும் வித்தியாசமான படைப்பு. வளவளவென்று பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பாத்திரம், கடைசியில் சில வார்த்தைகளில் வாயடைக்கச் செய்வது அழகியலின் உச்சம். கடைசி காட்சியில் தான் எழுதிய, ‘நீ என்னுடன் இருந்தால்...’ சிறுகதையை ஆசிரியரே சொல்வது போன்று வருகிறது. அப்போது புத்தகங்களி ன் பக்கங்களை கண்ணீர் நனைத்துவிடும். நெகிழ வைக்கும் அன்பு, உறவுகளை புரிந்து கொள்ள உளவியல் பாடங்கள், ஆண்டவனோடு உள்ள உறவை ஒளிர வைக்கும் ஆன்மிகம் என பல விஷயங்களுடன் அமைந்த நுால். – சுமித்ரா தேவி




