விஷ்ணு பல்லவன் சரித்திர நவீனம்
பக்கம்: 408 கலை, சிற்பம், ஜைனம், பவுத்தம், வைணவம், சைவம் போன்ற விஷயங்களை, ஒரு வரலாற்று நவீனத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால், பல்லவர்களின் ஆட்சிக் காலத்தை விட்டால், வேறு ஏதும் கிடையாது. எனவே, இதையும் ஆசிரியர் தன் நவீனத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.பேராசிரியர் கல்கியையும், சாண்டில்யனையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்த வரலாற்று நவீனத்தை எழுதியிருக்கிறார் ஆசிரியர். விறுவிறுப்பு, திருப்பங்கள், சஸ்பென்ஸ் என, வாசகனைக் கட்டிப் போடுகிறது நவீனம். பத்மினி, பவானி, பைரவி, மயில் என, இவர் உருவாக்கியுள்ள பெண் கதாபாத்திரங்களில் பாலியல் உணர்வை சற்றே தூக்கலாக சித்தரித்திருக்கிறார். பத்மினி மட்டும் ஓரளவு விதி விலக்கு.வரலாற்று நவீனம் வாசிப்பில், மிகத் தெளிவும், எளிய மொழி நடையும் அவசியம் என்பதை உணர்ந்து எழுதியுள்ள, ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது. களப்பிரர் காலத்தில், பூதத்தாழ்வாரும் இருந்தாரா? கற்பனையா? சில நிஜ கதாபாத்திரங்கள் தோன்றும்போது, காலம் பற்றிய கேள்வி குறுக்கிடுகிறது. கற்பனை நவீனம் தானே? படித்து மகிழுங்கள். தமிழின் வரலாற்று நவீனத்திற்கு, இது ஒரு நல்வரவு.