முகப்பு » கட்டுரைகள் » தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் பருவ இதழ் - தொகுதி 22

தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் பருவ இதழ் - தொகுதி 22

விலைரூ.200

ஆசிரியர் : டி.ராஜா ரெட்டி

வெளியீடு: தென்னிந்திய நாணயவியல் கழகம்,

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

 அண்ணா சாலை, சென்னை. (பக்கம்: 176)

தொல்லியல் ஆய்வை மேற்கொள்ளும் பல்வேறு அமைப்புகளில், தென்னிந்திய நாணயவியல் கழகம், தனிச்சிறப்பு
வாய்ந்தது. ஒவ்வொரு வருடமும், தவறாமல் தனது ஆண்டு கருத்தரங்கை, தென் இந்தியாவின் பல்வேறு இடங்களில்சிறப்புடன் ஒருங்கிணைப்பதுடன், அக்கருத்தரங்கில், கழகத்தின் பருவ இதழை வெளிக்கொணருவதை, இக்கழகத்தின்நிர்வாகிகள் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.
தென்னிந்திய நாணயங்கள் மீதான 22 ஆய்வுக் கட்டுரைகள், கடந்தாண்டின் கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட தலைமையுரை, அண்மையில் பதிப்பிக்கப்பட்ட நாணயவியல் புத்தகங்களின் மதிப்பீட்டுரைகள் மற்றும் நாணயங்கள் பற்றிய செய்தித் தொகுப்புகளுடன், இவ்விதழ் வெளிவந்துள்ளது.
"வடமாநிலத்தில், அக்காலத்தில் இருந்த அரசுகள் போல், எல்லா கட்டமைப்புகளும் கொண்டு, சங்ககாலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் இருக்கவில்லை என்றும், அம்மன்னர்கள் காசுகள் வெளியிடவில்லை என்றும் கூறி வந்தக் கருத்தை, இரா.கிருஷ்ணமூர்த்தியின் சங்ககால நாணயங்கள் கண்டுபிடிப்பால், மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது, என்று, 2011ம் ஆண்டின் கருத்தரங்கத்தில், வரலாற்று அறிஞர் பேராசிரியர் எம்.ஜி.எஸ்.நாராயணன், தமது தலைமை உரையில் குறிப்பிட்டு இருப்பது, இவ்விதழில் வெளியாகியுள்ளது.
காலத்தால் முந்தைய நாணயங்கள் குறித்து, கிரிஜாபதி, ராஜா ரெட்டி, நரசிம்மமூர்த்தி ஆகியோரின் கட்டுரைகள், படிப்போர் பயன்பெறும் வண்ணம், புதிய செய்திகளைக் கொண்டுள்ளது. பண்டைய கேரளாவின் பொருளாதாரத்தில், ரோமானிய நாணயங்களின் பங்கை, தியாக.சத்தியமூர்த்தியின் கட்டுரை சிறப்பாக எடுத்துரைக்கிறது. பெரியபட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட, பிற்காலப் பாண்டியவர்களின் நாணயங்கள் குறித்து, முனைவர் சண்முகம் அவர்கள் கட்டுரை அமைத்துள்ளார்.
கீழைச்சாளுக்கியர், கதம்பர்கள், சில்ஹாரர்கள், கீழைக் கங்கர்களின் காசுகளின் மீது இருக்கும் எண் குறியீடுகள், சுழற்சி ஆண்டுகளைக் குறிக்கும் என்ற ராதாகிருஷ்ணனின் கருத்து, ஏற்புடையதாக உள்ளது. கேரளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள காசுக் குவியல்களின் பட்டியலை, சரோஜினியம்மாவின் கட்டுரையில் காணலாம். இஸ்லாமிய வரலாற்றுப் பதிவுகள், வரலாற்று நம்பகத்தன்மை உடையவை என்பது, தற்கால வரலாற்று அறிஞர்களின் எண்ணம்.
ஆனால், பிரிஷ்டாவின் தாரிக்-இ-பிரிஷ்டா என்ற நூல், பாமினி சுல்தான்களின் நாணயங்களின் விவரங்களை, பல
தவறுகளுடன் தருகிறது என, தக்க ஆதாரங்களுடன், ராஜா ரெட்டி விவரிக்கிறார். 18ம் நூற்றாண்டில் நிலவிய,
நாணய மாற்ற மதிப்புப் பட்டியல், மிகவும் பயனுள்ளதாகும். பின், இணைப்பாக இருக்கும் புத்தக மதிப்பீடுகளும்,
 நாணயவியல் செய்திகளும், இவ்விதழின் சிறப்பாகும்.முந்தைய பருவ இதழ்களை, காலம் தவறாமல், சிறந்த முறையில் பதிப்பிப்பதில், பெரும் பங்காற்றிய முனைவர் ஸ்ரீனிவாசன் ஓய்வு பெற்றதைக் குறிப்பிட்டு, அவரது சீரிய சேவையை பதிப்பாசிரியர்கள், இவ்விதழின் முன்னுரையில் நினைவு கூர்ந்திருப்பது சிறப்பாக உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us