முகப்பு » கட்டுரைகள் » காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து

விலைரூ.90

ஆசிரியர் : சுந்தர ஆவுடையப்பன்

வெளியீடு: நேசம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிமன்ற, இலக்கியமன்ற மேடைகளில், தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர். தேச தந்தை மகாத்மா காந்தி பற்றி, லட்சக்கணக்காண புத்தகங்கள் உலகெங்கும் பதிப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்புத்தகத்தில், மொத்தம் 31 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர், தன் நண்பர் புகழ்மதியிடம் உரையாடிய போது, எழுந்த கேள்விகளுக்கு, காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தை விவரித்து, அதன் மூலம் விடை சொல்கிறார்.
பள்ளி மாணவர் மனதில் பதியும் வண்ணம், எளிய சொற்களை கையாண்டு இருக்கிறார் ஆசிரியர். தன்னை பகைமை உணர்ச்சியோடு தேடிக் கொண்டிருந்த, ஆங்கிலேயர் வீட்டிற்கே, ஆயுதம் ஏதுமில்லாமல், காந்தி, தனியே போய் நின்றது தான் அகிம்சையின் வீரம்; அநியாயச் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி, சிறையில் இருந்த போது, சிறை விதிகளை பின்பற்றினார். யார் விதிகளை மதிக்கிறார்களோ, அவர்களே, விதிகளை வகுக்கும் தலைவர்கள் ஆவார்கள் என, சின்ன சம்பவங்கள் மூலம், அரும்பெரும் கருத்துகளை, ஆசிரியர் விதைக்கிறார்.
அனைத்து மொழிகளிலும், சிறந்த மொழி அன்பு தான்; தென்னாப்ரிக்காவில் தன்னை அவமானப்படுத்திய, அரசின் தலைவர் ஜெனரல் ஸ்மட்சுக்கு, தன் கையால் உருவாக்கிய செருப்புகளை, காந்தி பரிசாக தருகிறார். அதை, இறுதி வரை பாதுகாத்த ஜெனரல் ஸ்மட்ஸ், ‘என்னை மனிதனாக்கிய மகாத்மா’ என, காந்தியை புகழ்ந்து, கட்டுரை எழுதியுள்ளார்.
தென்னாப்ரிக்க சிறைக்கு வரும், கைதிகளை அவமானப்படுத்துவதற்காக வழங்கப்படும் குல்லாவை தான், காந்தி, விடுதலை வீரர்கள் அணியும் சின்னமாக்கினார். எது, அவமான சின்னமாகக் கருதப்பட்டதோ, அதையே புனித சின்னமாக, புரட்சி சின்னமாக மாற்றிக் காட்டினார்.
ஆங்கிலேயர்களால், ‘அரையாடைப் பக்கிரி’ என, கேலி செய்யப்பட்ட காந்தி, முதல் வட்டமேஜை மாநாட்டிலும், வழக்கம் போல அணியும், எளிய உடையுடனே கலந்து கொண்டார். கவுரவம் என்பது உடையில் இல்லை  என, ஒவ்வொரு கட்டுரையிலும், தன் எழுத்தின் முத்திரையை பதிக்கிறார் ஆசிரியர்.
இன்றைய உலகப் பிரச்னைகளுக்கு காந்தியம் நிச்சயம் தீர்வு தரும் என, ஆசிரியர் நம்புகிறார். ‘காந்தியம் என்றுமுள காயகல்பம்... எப்போதும் நம்மைக் கரை சேர்க்கும்’ என்கிறார். நம் வீட்டு அலமாரியில், நிச்சயம் இருக்க வேண்டிய கருத்தாழமிக்க புத்தகம்.
சிசு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us