அடித்தள மக்கள் வரலாறு
16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, (பக்கம்: 306) தமிழகத்தில், இலக்கியம், அரசியல், மொழி வரலாறு பற்றி எழுதுவது மிகவும் சிரமமான செயல். இதற்கு முதல் காரணம், கால வரிசைப்படி தகவல்களைச் சேகரிப்பதில் சங்கடங்கள் அதிகம். இவற்றை கடந்து எழுதி முடித்து விட்டாலோ, கண்டனங்கள், வாதப்பிரதிவாதங்கள் என, விமர்சனப் புயல், பூகம்பம் கிளம்பும்.இதுபோன்ற சங்கடங்கள், சர்ச்சைகளுக்கு இடம் தராத வகையில், இந்நூலாசிரியர் அடித்தள மக்களின் வரலாற்றினை, எழுத்தாவணம், வழக்காறு, வாய்மொழித் தகவல் சேகரிப்பு, கல்வெட்டு ஆய்வு என, பல வழிகளில் தனது தேடல்களை அகலப்படுத்தி, ஆழமாக ஆராய்ந்து, இந்நூலை எழுதியிருக்கிறார். 13 கட்டுரைகளைப் படித்து முடிக்கையில், வியப்பு விண்ணை முட்டுகிறது. இடையிடையே நிறைய குட்டிக் கதைகள், அந்த கதைகளில் நதி மூலம், ரிஷி மூலம், அவற்றின் உட்பொருளில் உள்ள மெய், பொருள் பற்றிய ஒரு சிறு அலசல். தமிழக மக்களின் தொன்மங்கள் பற்றிய இந்நூல் நமது பாரம்பரியத்தை, முன்னர் வாழ்ந்து மறைந்த மக்களை மிக நன்றாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது. வரலாறு படிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு, நிறைய விஷயங்கள் இருக்கிறது.