அவர் அடையாளங்களும் ஆளுமைகளும்
தமிழ்க்கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை -29, (பக்கங்கள்: 360 ) அறவாணர் எழுதிய நூல்கள், 70க்கு மேல். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள், தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? தமிழ் மக்கள் வரலாறு - மூன்று தொகுதிகள். கல்லூரி விரிவுரையாளராக பணியைத் தொடங்கிய இவர், திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராக பணிநிறைவு செய்தவர். இவரது நூல்களையும் பணியையும் பாராட்டி, பல அமைப்புகளின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவர். நானும் என் தமிழும், என்னைச் செதுக்கியவர்கள் என்று க.ப.அறவாணன் அவர்களே தன் வாழ்க்கைச் சுருக்கத்தை, ஆற்றிய தமிழ்ப் பணியை, சாதனைகள் பற்றி சுருக்கமாக தன் வரலாறாக எழுதியுள்ளது. படிக்கப் பெரிதும் சுவைக்கிறது. ஆளுமைகள் பகுதியில் பாடம் நடத்தும் முறை, கற்பிக்கும் முறை, மனித நேயம், அறவாழ்க்கை பன்முகச் சிந்தனையாளர் என்ற தலைப்புகளில், ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. உறவுகள் மனதை தொடும் பகுதியாகும். அவர் இன்றி அவள் இல்லை என்று துணைவியார் தாயம்மாள் அறவாணன் கட்டுரை, நூலின் மகுடம். என் அண்ணா, எங்கள் தாத்தா, என் தொப்பி தாத்தா என்று பேரன், பேர்த்திகள் கட்டுரையும் புதுமையானது. மனதைத் தொடுகிறது. தமிழ் ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல். நூல் அமைப்பும் அருமை.