/ கதைகள் / சதுரங்க வியூகம்

₹ 360

அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆட்சிப்பணி அதிகாரியின் வாழ்வை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். சம்பவங்களும், உரையாடலும் காட்சி மயமாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய இனத்தில் பிறந்த பெண் கயல்விழி. ஆட்சிப்பணி தேர்வுக்கு தயாரான போது கயவர்களால் சீரழிக்கப்படுகிறார். சேவை உணர்வு உள்ள கலெக்டர் புகழேந்தி அவரை காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார். இதை அறிந்து எரிச்சல் அடைகிறார் கலெக்டரின் மனைவி. செல்வாக்குள்ள அமைச்சரின் மகளான இவரது செயல், கலெக்டரின் பணியில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இதை எதிர்கொள்ள கலெக்டர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளால் விறுவிறுப்பு குறையாமல் கதை நகர்கிறது. குழப்பமற்ற காட்சிகளுடன் அமைந்த திரைப்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகிறது. ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் கி.ராமசுப்பு வாழ்த்துரையில், ‘எப்போதோ நிகழ்ந்த உண்மை சம்பவம் கதையாக உருவெடுத்திருந்தாலும், இன்றும் பல இடங்களில் தீண்டாமையும், ஜாதி பாகுபாடுகளும் தலைவிரித்தாடுவதை காண்கிறோம். நாவலை படிக்கும் வாசக பெருமக்கள் சிந்தித்து செயல்பட துாண்டும் விதத்தில் சித்தரித்து விழிப்புணர்வு பெற வழி வகுத்துள்ளார் கதாசிரியர்...’ என குறிப்பிட்டிருப்பது, கதைக்கு வலுவூட்டுகிறது. இன்றைய சமூகம் கற்க வேண்டிய பாடமாகவும் அமைந்துள்ளது. தினமலர் வாரமலர் இதழில், ‘விண்ணையும் தொடுவேன்’ என்ற தலைப்பில் தொடராக வாசகர்களின் அமோக ஆதரவை பெற்ற இந்த நாவல் இப்போது புத்தகமாகியுள்ளது. கதையில், ‘மனிதனாக நிற்கும் போது தான் மேலே கூர்வாள்களை எறிவர். மனது பரந்து விரிவடைந்து வானமான பிறகு எதை எறிய முடியும்...’ போன்ற கவித்துவ விவரிப்புகள் நிறைந்துள்ளன. வாசிப்புக்கு சுவை ஊட்டி சிந்தனையில் தெளிவை ஏற்படுத்துகிறது. எளிய நடையில் தெளிந்த நீரோடை போல் அமைந்துள்ள நாவல். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை