தருமபுரி இளவரசன் படுகொலை
தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம், தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல்; அதன்பின் ஏற்பட்ட கலவரம்; மரணம். இளவரசன் மரணம் தற்கொலை அல்ல, படுகொலை என்று பேசும் இந்த நூல், அதற்கான பல ஆதாரங்களை முன்வைக்கிறது. இளவரசனுக்கு, மது குடிக்கும் பழக்கம் இல்லை; புகை பிடிக்கும் பழக்கமும் இல்லை. ஆனால் காவல் துறை, இளவரசனின் அருகில் மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் இருந்ததாக கூறியிருக்கிறது. இளவரசன், குர்லா விரைவு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ரயிலின் ஓட்டுனர், அதுகுறித்து, அடுத்த ரயில் நிலையத்தில், தகவல் கொடுக்கவில்லை என்கிறது இந்த நூல். அதேபோல், நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை சொல்லியும், காவல் துறை அதற்கு எதிராக செயல்பட்டு இருக்கின்றது என, இந்த நூல் ஆதாரத்துடன் பேசுகிறது. இதுபோன்ற எண்ணற்ற செய்திகளை, இளவரசன் படுகொலைக்கு ஆதாரமாக முன்வைக்கின்றது. தமிழக அரசாலும், காவல் துறையாலும் இதை மறுக்க முடியுமா என்பது, ஆய்வுக்குரியது. திராவிட கட்சிகள், தலித்துகளுக்கு நியாயம் வழங்கவில்லை என்றும், தலித் கட்சிகள், தலித்துகளை உசுப்பேற்றி, அரசியல் செய்கின்றன என்றும் இந்த நூல், இடித்துக் காட்டுகிறது.ம.வெ.,