தொண்டு நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்துவது எப்படி?
சமூக சேவைக்கு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்துவதற்கு வழிகாட்டும் நுால். திட்டமிடுதல், கட்டமைப்பை உருவாக்குதல், நிதி நிர்வாகம் செய்தல், ஆவணங்களை பராமரித்தல், வெளிப்படை தன்மையுடன் இயங்குதல், தேவை அறிந்து பணியாற்றுதல், அரசு மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் நடைமுறைகளை தெளிவுபடுத்துகிறது. புத்தகம், 110 அத்தியாயங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. சேவையின் அவசியம் அறிந்து தீர்மானம் செய்தல், அதை நிறை வேற்றும் வகையில் திறன் மிக்க திட்டமிடுதல், சட்ட அறிவுடன் நிறுவன கட்டமைப்பை உருவாக்குதல், நன்கொடையாளர்களின் அறிமுகம், களத்தில் ஏற்படும் மாற்றங்களை கணித்து அதற்கு ஏற்ப இயங்கி விளைவுகள் உருவாக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது. நம் நாட்டில் தொண்டு நிறுவனத்தை ஏன் துவங்க வேண்டும் என எளிய கேள்வியை முன் வைத்து, திருப்தி தரும் பதில்கள் தரப்பட்டுள்ளன. நிறுவனம் துவங்குவதற்கு தேவையான தகுதி, திறன்கள் பற்றியும் எடுத்துரைக்கிறது. நிர்வாகம் அமைத்தல், அலுவலகத்தை உருவாக்குதல், பணியாளர்களை தேர்வு செய்தல், சட்ட அங்கீகாரத்துடன் இயங்க உரிய ஆலோசனைக் குழு என விரிவாக தகவல்கள் உள்ளன. நிதி திரட்டுவதற்கான வழி முறைகள், திட்டமிட்டு செயலாற்றுதல், ஆய்வு செய்து மறுகட்டமைத்தல் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எந்தந்த துறைகளில் சேவை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதும் தனியாக தரப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் ஆதரவு, சர்வதேச நிதியங்களிடம் பெறும் உதவி குறித்து எண்ணற்ற தகவல்கள் தனித்துவமுடன் தரப்பட்டுள்ளன. வெளிநாட்டு அமைப்புகளிடம் நிதி திரட்டும் வழிமுறை விவரிக்கப்பட்டுள்ளது. வாழ்வில் திருப்தி தரும் சேவைக்கு நிறுவனத்தை துவங்கி, வெற்றிகரமாக நடத்த சட்ட ரீதியாகவும், அனுபவப்பூர்வமாகவும் வழிகாட்டும் நுால். – ராம்




