தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவது எப்படி
சட்டசபை, பார்லிமென்ட், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வழிகாட்டும் நுால். தேர்தல் விதிமுறை முதல், பூத் கமிட்டி அமைப்பது வரை பாடம் புகட்டுவது போல் கச்சிதமாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய வரலாறு, அதிகாரங்கள், நடைமுறை விதிகள் குறித்து முதலில் தெளிவு படுத்துகிறது. உள்ளாட்சி, சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களுக்கான தனித்தனி நடைமுறை விதிகள், வித்தியாசங்கள் கூறப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறையில் ஓட்டுப் போடாதவர் பற்றி அலசி, ஆராய்ந்து காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை நிவர்த்திக்க செய்ய வேண்டிய பணிகள், தேர்தலில் போட்டியிடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் குறித்து கருத்துகளை பகிர்கிறது. பிரசாரத்தில் வேட்பாளர் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றி விளக்கம் தருகிறது. பிரசார காலத்தில் வேட்பாளர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், தர வேண்டிய வாக்குறுதிகளை வரையறை செய்து அறிவுரை போல் வழங்குகிறது. வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, மன உறுதியை பேணுவது, தைரிய அணுகு முறை என வரையறுத்து கூறுகிறது. இளைஞர்களை ஈர்ப்பதில் தனித்துவம், பெண்கள் ஓட்டுகளை திரட்டுவதில் உள்ள பிரசார உத்திகளை வகுத்து தருகிறது. முக்கியமாக கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டோர் நிலையை மதிப்பீடு செய்து பலம், பலவீனத்தை அறிந்து செயல்பட அறிவுரைக்கிக்கிறது. புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் போட்டியிடுவோர் வழங்க வேண்டிய வாக்குறுதிகள் பற்றி வரையறுக்கப்பட்டுள்ளன. நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும் விதமாக அவை இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. குறிப்பாக மாணவர் நலன், கல்வி, பெண்கள் வளர்ச்சி, விவசாய சேவை, லஞ்சம் ஒழிப்பில் கவனம் செலுத்துவதுடன் அவற்றை செயல்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறது. மக்களாட்சி தத்துவத்தில் தேர்தல் நடைமுறையின் மாண்பை பரவலாக்கும் நுால். – மதி




